ஜூலை 03, 2007

உதவி

நான் சென்னையில் சூளைமேட்டில் தங்கியிருந்த போது கணிணி பயிற்சி வகுப்பிற்காக தினமும் விருகம்பாக்கம் செல்வது வழ‌க்கம்.  சிவன்கோவில் தெரு வழியாக கோடம்பாக்கம் வரை பேருந்திற்காக நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

அன்றைக்கும் வழக்கம் போலவே கோடம்பாக்கம் சிக்னல் அருகே, மின்சார வாரிய அலுவலகத்தைக் கட‌ந்து சென்று கொண்டிருந்தேன். சாலையோரம், இருபத்தியேழு வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் வருவோர் போவோரிட‌மெல்லாம் ஏதோ தயங்கித் தயங்கி கேட்டுக்கொண்டிருந்தார். நன்றாக தலைவாரி, மிக நாகரிகமாக உடை அணிந்திருந்தார். ஆனால் கண்களில் ஒருவித பயம் தொற்றியிருப்பதை என்னால் உணர முடிந்தது. என்னை நெருங்கிய நிலையில் “பாஸ், இங்க ஒரு ஃப்ரண்ட பாக்க வந்தேன். ஆனா அவரு வீட்ல இல்லை. வீடு பூட்டியிருக்கு. திரும்பிப்போக காசு இல்லை. போரூர் வரைக்கும் போகணும். ஹெல்ப் பண்ணுங்க பாஸ். ப்ளீஸ்” என்று தளர்ந்த குரலில் வேண்டினார் அந்த வாலிபர்.

நான் சற்றும் யோசிக்காமல், “சரி, வாங்க. நானும் அந்த வழியாத்தான் போறேன். டிக்கெட் எடுத்துத் தரேன்” என்று கூறி அழைத்தேன். சிறிது வினாடிகள் யோசித்து தலையாட்டிவிட்டு என்னைத் தொடர்ந்தார். பேருந்து வரவும் அவசரம் அவசரமாக என்னைத் தள்ளிக்கொண்டு ஏறினார். விருகம்பாக்கம் ஒன்று, போரூர் ஒன்று, இரண்டு பயணச்சீட்டுகள் எடுத்தேன். போரூர் சீட்டை அவரிடம் தருமுன் அவர் இருக்கை கிடைத்து அமர்ந்துவிட்டார். நான் அருகில் சென்று சீட்டை பத்திரப்படுத்த சொன்னேன். வாங்கி கையில் வைத்துக்கொண்டார், என் நிறுத்தம் வரும்வரை அவருடைய பதற்றம் பார்வையில் சற்றும் குறையவில்லை. நிமிடத்திற்கு இருமுறை என்னைப்பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டார். நான் சைகையில் பார்க்கலாம் எனக்கூறி விட்டு என் நிறுத்தத்தில் இறங்கி சென்றுவிட்டேன். அத்தோடு அவர் என் நினைவிலிருந்து அகன்றுவிட்டார்.

 நாட்கள், மாதங்கள் சென்றன. ஓரிரு மாதங்கள் கழித்து அதே மின்வாரிய அலுவலகம், கோடம்பாக்கம். நான் எதிர்பார்க்கவில்லை. அதே நபர். அதே காட்சி, நான் முன்பு விள‌க்கியது போல். ஒருசில வினாடிகள் நான் தூரத்திலேயே நின்றுவிட்டேன்.

சற்று சிரமப்பட்டே அவரை கடந்து சென்றேன். அவரை இனி மறப்பது சற்று கடினம்தான் என அப்போது எண்ணிக்கொண்டேன்.

அருண் சரவணன்
செப்ட‌ம்பர் 2007