டிசம்பர் 13, 2011

தாய்க்கெழவி

விட்டகொற தொட்டகொறையா
விழியோரம் தேங்குறத‌
உன் மகபுள்ளபேரன் நான்
உனக்காக எழுதிவச்சேன்.

முழுசா மூப்படஞ்சு
உருவம் உருக்கொலஞ்சு
ஒடம்ப கழட்டிப்போட்டு
ஊர்கோலம் போனவளே!

உன் சாவுக்கு வந்தவுக‌
வைரம் பாய்ஞ்ச கட்டயினு
வாய்க்கு வாய் சொன்னாக.

கட்ட வேகுமுன்ன‌
சொத்த கணக்குப்பாக்கும்
கேடுகெட்ட ஒலகமிது.

நீ ஏழேழு தலமுறைக்கும்
எழுதிவச்ச சொத்தெல்லாம்
பிடிச்சுவச்ச உன் உசுருதான்டி.
இப்ப அது பிரிஞ்சிபோனது பிடிக்கல.

வெளிப்பார்வை, ஒலகத்துக்கு
வெலகிப்போயி மறஞ்சிருக்க.
மரணம் ஒடம்புக்குத்தான்,
மனசெல்லாம் நெறஞ்சிருக்க.

சேதிகேட்டு சென்னையில‌
பதறாமத்தானிருந்தேன்.
ஊருவந்து பாக்கயில‌
ஒதறுதடி நெஞ்சமெல்லாம்.

நீ இல்லாத அறையிலெல்லாம்
சொல்லாத கதையெல்லாம்
செல்லாத காசாட்டம்
பழங்கதையாப் போனதடி.

ஊருக்கும் நாட்டுக்கும்
வரலாறு பலவுண்டு.
என் வீட்டுக்கும் காட்டுக்கும்
சரித்திரம் நீதானே.

தாந்தோன்றி மலைப்பக்கம்
வேரூன்றி வந்தவளே!
என் தாய்வழிச் சீதனமே!
தென்னவளே! மாருத‌மே!

ஓம்மகள நீ வளத்த.
அவமகளயும் நீதான் வளத்த.
பத்தாக்கொறைக்கு
அவமக, என் தங்கச்சியயும்
நீதான் சொமந்த.

தண்டுவடம் வளஞ்சுபோயி
நீ தடுமாறித் திரியையில,
கழுவி உன்னக் குளிப்பாட்டி
தாயானா தங்கச்சி.
கொழந்தயா மாறிப்போன
எங்கொலசாமி நீதானே.

சூரியன கும்பிடாம‌
ஓன் ஒலகம் விடியாது.
ஓங்கதய கேக்காம‌
ஏன் இரவும் முடியாது.

எஞ்சீயானின் பேர‌ கேட்டோம்,
நீ சாகும்வர சொல்லலியே.
செத்தைய கும்பிடுன்னு
சுருக்க‌மா சொல்லிப்புட்டு
புருசன்பேர‌ புதிரா தந்துபுட்டு
பூமியவிட்டுப் போனவளே!
குப்புசாமி பொஞ்சாதி
தவறிடுச்சுன்னு ஊர்பூராம்
நீ செத்த சேதியோட
சீயான் பேரும்
சேர்ந்தே வந்த‌தடி!

மருமக்க வீடுகள்ல
கை நனைக்க கூடாதுன்னு
வேப்பம்பழம் சுள்ளி பொறுக்கி
சந்தையில வித்த பணம்,
பென்ஷன்காசு ஐநூறும்
மாசாமாசம் வாங்கி வச்சு
சொந்தமா ஓட்டுவீட்டில்
சொகமா வாழ்ந்தவளே!

உன் வைராக்கியத்துக்கு முன்னால‌
இந்த உலகமெலாம் தவிடுபொடி.

கொலையாம சோறு வடிச்சு
கூட்டுரசம் பொரியல் செஞ்சு
எலந்தப்பழ‌ மிட்டாய் தட்டி
என் ஒருத்தனுக்கா படச்சவளே!

கரூருக்கு ஒருவாட்டி
காந்தி வந்த கத சொன்ன.
கையெடுத்துக் கும்பிட்டுட்டு
அண்ணல் போன வழி சொன்ன.

எம்சியாரு சிவாசின்னா
எம்பூட்டு உசுருனக்கு.
உன் சந்ததிக்குத் தெரியாதா
நீ சகலகலா இரசிகையின்னு.

என்ன பெத்தவளின்
ஆத்தாளப் பெத்தவளே!
நான் பெத்தவள பாக்குமுன்ன‌
பரலோகம் போனவளே!
உன் அஞ்சாம் தலைமுறைய‌
நீ அருகயிருந்து பாக்கலயே!

இருந்தாலும் நெனச்சுகிட்டேன்,
அடுத்த தலமுறையா
அவதரிச்சு வந்தவளே,
எம்மகளா பொறந்து வந்த‌
மீனாட்சி நீதான்னு.

டிசம்பர் 08, 2011

சாத்தான் ஓதும் வேதம்

சாத்தான் ஓதும் வேதம் இந்நாட்டில் நாசிக் என்னும் இடத்தில் பல்வேறு பதிப்புகளாக அச்சடிக்கப்பட்டு வருகின்றது. நம் அனைவராலும் வாழ்க்கையை அறியும் நோக்கில் இவ்வேதம் வாசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதன் மூலம் பொருள் சேர்க்கும் பொருள் விளங்கா மாயலோகத்திற்குள் லயித்துக்கிடக்கிறோம்.

சகல இன்பங்களையும் நம் முன் வைத்துக்கொண்டு அதனை சிலர் மட்டுமே அனுபவிக்க பலர் அனுபவிக்க முடியா வண்ணம் ஏற்றத்தாழ்வுகளை வைத்துக்கொண்டு "எதற்கும் ஆசைப்படாதே" என்றால் எந்த வகையில் அது நியாயமாகும்? புத்தனுக்கு போதி மர நிழலில் சித்தம் களங்கியிருக்க வேண்டும். மனிதனுக்கு ஆசை எந்நாளில் தோன்றியதென்று யாரேனும் அறுதியிட்டுக் கூற இயலுமா?

ஒரு ஆதிவாசிக்கும் நமக்கும் என்ன வேறுபாடு? அவன் நம்மைப் போல மின் கட்டணம் செலுத்துவதில்லை. மின் தடையால் அவதியுறுவதில்லை. நம்மைவிடவும் நிம்மதியான சூழலில் நல்ல உணவுண்டு நன்கு உறங்கி வாழ்ந்து வருகிறான். இதில் யார் பின் தங்கியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நம்மிடம் காசு இல்லையென்றால் நாய் கூட மதிக்காது என்ற நிர்க்கதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சோற்றுக்கு அலைந்தோம். சோறு கிடைத்த பின் சொகுசுக்கு அலைந்தோம். சொகுசு கிடைத்த பின் சும்மா இருந்தோமா? புகழுக்கு அலைந்தோம். பின் அதிகாரம், ஆட்டம், பாட்டம், முக்தி, மோட்சம், இன்ன பிற. எதனைத் தேடி அலையாமல் இருந்தோம்? இழப்பதற்கோ பெறுவதற்கோ ஒன்றுமில்லை என்பதல்லவா உண்மையான பூரண சுதந்திரம், நிம்மதி எனப்படுவது.

வாழ்க்கையை நாம் துரத்திக்கொண்டு ஓடவில்லை. வாழ்க்கை தான் நம்மை துரத்தியடிக்கிறது. பணங்காய்க்கும் மரங்களாகும் முயற்சியில் வாடி வளர்ந்து காய்ந்து கருகி பூத்து பொசுங்கிக் கிடக்கிறோம்.

வாழும் காலம் முழுதும் பொருள் தேடி பொருள் சேர்த்து வாழ மறந்தவர்கள் நாம். ஆயிரம் அறைகள் கொண்ட மாளிகை நமக்குச் சொந்தமாயினும் நாம் உறங்கப் போவது ஓர் அறையில் தான். ஆயிரம் ஏக்கர் நிலத்தை அபக‌ரிப்பவன் ஒரு ஊரையே வளைத்துப் போட்டாலும் அவனுக்கும் ஆறடிதான் கடைசியில் மிஞ்சும்.

தன் இரைக்காக அலையும் விலங்கு கூட அடுத்த சிற்சில வேளைகளுக்கு மேல் இரையைச் சேமிப்பதில்லை. நம் பாத்திரம் மட்டும் ஊற்ற ஊற்ற நிரம்புவதேயில்லை.

தலைக்குமேல் கடன் இருந்தாலும் சரி, மடியில் அளவுக்கு மீறிய கணம் இருந்தாலும் சரி, தூக்கம் நிச்சயமாக வராது, எந்த மாளிகையில் படுத்தாலும்.

நாம் அனைவருமே பிச்சை தான் எடுத்துக்கொண்டிருக்கிறோம், பாத்திரத்தின் அளவுதான் வேறே தவிர பிச்சை ஒன்று தான். நம் உழைப்பு எல்லாம் ஆசையெனும் விழலுக்கு இறைக்கும் நீரே.

பணம் என்ற காகிததாள் நம்மை கட்டி ஆண்டுகொண்டிருக்கிறது. ஆறறிவு கொண்ட மனிதன் தன் ஆறாம் அறிவால் படைத்த பணமே அவனை அடிமையாக்கி வைத்திருக்கிறது.

எத்தனை கேவல‌மான ஈனப்பிறவிகள் நாம்?

நவம்பர் 28, 2011

இலவு காத்த கிளி


வாக்கப்பட்டவன் பொண்டுகன்னு
வெளக்கமாத்தால தொரத்துனேன்.

கழட்டிப் போட்ட அந்தத் தாலி தான்
வெரட்டி ஓட்டுதிந்த வாழ்க்கய.

வருசம் போகுது,
என் உருவ‌ம் போகுது.

அப்பன் ஊத்தும் கஞ்சி தான்
எத்தன நாளைக்கு இனிக்குமோ?

பரிசம் போட வந்த மாப்பிள்ள‌
எல்லாம் போயி சங்கதி போடல‌.

காட்டு வெலங்கு கூட‌ கூடுதே,
இந்த நாட்டுச் சிறுக்கிக்கென்ன‌ கொறச்சலு?

முப்பது வருசமும் போனதே
மூப்பு எப்ப வரும் தெரியல.

குத்த வச்சதென் பாவமா?
இன்னும் கன்னி கழியாம நிக்குறேன்.

ஒடம்ப தனிச்சு வச்சா கொடுமடா!
இத ஒரக்க சொன்னா அவ தாசியா?
அத ருசிச்சு தின்ன வரும் நாயெல்லாம்
அடிச்சு வெரட்டுனா பத்தினி.

நதியும் கடலும் ஒன்னா சேரலாம்.
பரிசல் கரையயும் சேரலாம்.
இந்த பாவி எப்ப கர‌ சேருவா?

வாழ்க்க பாசம்போல வழுக்குதே.
இனி வீணா ஏங்கி நான் தவிக்கிறேன்.
ஒத்தப் பனமரமா நிக்குறேன்.
செத்துப் பொழச்சு ஏன் வாழறேன்?

சுத்தி அடிக்குதென்ன சாமிதான்.
சுருங்கிப் போச்சு என் பூமிதான்.

எட்டுக்குத்துக்கு எளையதெல்லாம்
புள்ள குட்டியோட போகுதே.
என் காம்ப கசக்கித் தான் பாக்குறேன்,
எலவு ஒன்னுமே வரலயே, ஏங்குறேன்.

நாலு மொலத்துல கயிறு வாங்கி
நாண்டுகிட்டு நான் சாகவா?

ஓலப்பாயில ஒத்தயா
ஒடுங்கி படுத்ததும் பாடையா?
பொணமா வாழுமிந்த‌
பொழப்பெல்லாம் போதும் போதுமே போங்கடா.

ஆம்பளைக்கு என்ன வந்தாலும்
ஔசாரிகிட்ட போவானே.
பொட்ட முன்டையா பொறந்த‌தால்
பூசி மொழுகுறேன் மொத்தமா.

சோடி கெடைக்காம‌ கிளியொன்னு
சிறகொடிஞ்சு தவிக்குது.
மானம் மசுரு தான் பெருசுன்னு
மக்கா சாகாம கெடக்கும் உசுரிது.

அக்டோபர் 19, 2011

காதலின் நான் - அத்தியாயம் பத்து

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து 
அத்தியாயம் ஆறு
அத்தியாயம் ஏழு
அத்தியாயம் எட்டு
அத்தியாயம் ஒன்பது


மீண்டும் சந்திக்கவே கூடாதென்று வாழ்ந்துகொண்டிருந்தவர்களை காலவெள்ளம் ஒரே தீவில் ஒருவர் பின் ஒருவராக கரைசேர்த்துவிட்டது. இத்தீவை விட்டுத் திரும்பிச் செல்ல முடியாத குடும்பச்சூழலில் இருவருமே சிக்கித் தவித்தோம்.

காதலை துச்சமெனக் கருதும் நண்பர்களுக்கு இந்தப் புலம்பல்கள் எரிச்சலைத் த‌ரலாம். மேலும் பரிகசிக்கக் கூடத் தோன்றலாம். சொல்லப்போனால் காதல் என்று ஒரு தனிப்பட்ட உணர்வோ வேறு எந்த ஒரு மண்ணும் இப்பூவுலகில் கிடையாது. மனிதன் கொள்ளும் ஆசைகளில் அதுவும் ஓர் அங்கம். அவ்வளவே. நம்மிடம் சில நாட்கள் பழகிவிட்டுப் பிரியமுடியாமல் வாலை ஆட்டி நம் பின்னாலேயே ஓடிவரும் ஒரு நாயிடம் என்ன உணர்வு உள்ளதோ அவ்வளவே காதல் என்பதும் கூட. பழகிக் கலக்கும் அனைத்து உயிர்களுக்கும் காதல் பொதுவே.

பாரதிக்குத் தமிழின் மீது தீராத காதல். பாகிஸ்தானுக்கு காஷ்மீரின் மேல்.களம் வேறே தவிர காதல் ஒன்றுதான்.

வாழ்க்கை சதுரங்க ஆட்டத்தைப் போன்றது. அடுத்த கணம் எந்தத் தாக்குதலுக்கும் நம்மை தயார் செய்து முன்னேறும் முயற்சியே வாழ்வின் அம்சம். அதில் முன்னெச்சரிக்கையாக செயல்படுபவனும் அனுபவப்பட்டவனுமே பிழைத்துக் கொள்வான்.

உணர்வுகளுக்கு மட்டுமே முழுதும் அடிமையானவன் இக்கலியுகத்தில் நிம்மதியாக வாழவே முடியாது. ஒரு போர்க்களத்தில் நின்று போராடும் வீரனுக்குரிய மனநிலையிலேயே வாழ்வினை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு கோழைக்கு அங்கே என்ன நடக்குமென்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட ஒரு கோழையாக உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு குற்றவாளியாக நிற்கின்றேன்.

நான் என்ப‌து யாதெனின் ‍-
  • மனதைக் கல்லாக்கும் கலையை அறிந்திராதவன்;
  • பூவிதழின் மென்மையினை விடவும் மெல்லிய இதயத்தைக் கொண்டவன்;
  • காதலை இட்டுச்செல்லவும் அப்படியெ விட்டுச்செல்லவும் தெரியாதவன்;
  • வரலாற்றில் இலக்கியங்களில் திரைப்படங்களில் வாழ்ந்து மறைந்த காதலை வாழ்வோடு பொருத்த முயன்று தோற்றவன்;
பொங்கிப்பெருகி ஓடும் நதி, வற்றி மீண்டும் ஓடையாய் இளைத்தோடும் வேளையில் உயிர் பெற்று உருவாகி நீந்தும் மீனுக்குத் தெரியுமா, வலையில் சிக்குவோமா? ஓடை வற்றும் வெயிலில் சிக்குவோமா என்று.

- நதி பாயும்

காதலின் நான் - அத்தியாயம் ஒன்பது

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து 
அத்தியாயம் ஆறு
அத்தியாயம் ஏழு
அத்தியாயம் எட்டு

பழைய பஸ் பாஸை ரினீவல் செய்யலாம். பழைய காதலை ரினீவல் செய்ய இயலுமா?

நான் இராமச்சந்திரமூர்த்தியும் இல்லை. இராவணனும் இல்லை. ஆனால் என் கதையில் வேண்டுமென்றே ஒரு சூர்ப்பனகை உருவாக்கப்படுகிறாள்.

அன்றும் சரி. இன்றும் சரி. அவள் செய்வதற்கெல்லாம் சித்ரவதை என்று தான் பெயர். ஆனால் இந்த தேவதையின் திருவிளையாடல்களில் எனக்குச் சம்மதமில்லை.

பந்து உதைபட்டுத் திரும்பலாம். இந்த பாழாய்ப்போன காதலுமா?

ஓர் இரவில் மனைவியறியாமல் பரண் மேல் பல வருடங்களாக உறங்கிக் கொண்டிருந்த காதல் மடல்களையும் வாழ்த்து அட்டைகளையும் எடுத்துப் புரட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்.

பழைய நினைவுகள் கண்முன்விரியத் தொடங்கின.

ஆறு வருடங்களுக்கு முன் ஒரு மழை நாளில்... இந்த மழை வரும் பொழுது காதல் வருகின்றதா? அல்லது காதல் வரும் பொழுதெல்லாம் மழை வருகின்றதா என்று வெகு நாட்களாகவே எனக்கொரு சந்தேகம்.

ஆறு வருடங்களுக்கு முன் ஒரு மழை நாளின் மாலை நேரத்தில் அவளுக்கு "அசைவம்" சலித்து விட்டதோ என்னவோ ஒரு உயர்தர சைவ உணவகத்திற்கு என்னை அழைத்துச் சென்றாள். "அருண்! இங்கு சில ஸ்பெஷல் ஐட்டங்கள் கிடைகும். சாப்பிட்டுப் பார். அசந்து விடுவாய்!" என்றாள். நான் மனதுக்குள் ஒன்றை நினைத்துக் கொண்டே அவளைப் பார்க்கிறேன். அவள் "ச்சீ" என்றாள்.

"ஏ அருண்! இங்கு குழிப்பனியாரம் ரொம்ப ஸ்பெஷல். ரெண்டு ப்ளேட் குழிப்பனியாரம் கொண்டு வாங்க".

எண்ணெய் சொட்டச் சொட்ட காரக் குழிப்பனியாரமும் கொத்துமல்லிச் சட்னியும் எங்கள் மேசையில் வைக்கப்பட்டன. அவள் ஒரு பனியாரத்தைப் பிய்த்து சிறு துண்டை சுவைத்து விட்டு கன்னத்தில் குழி விழ பூரித்தாள்.

"இதுதான் அந்தக் குழி. நான் தான் அதில் விழுந்த பனியாரமோ?" என நினைத்துக் கொண்டேன். அந்த மாலைச் சிற்றுண்டியின் இறுதியில் அவள் கொடுத்து அச‌த்திய வாழ்த்து அட்டை இன்னும் முனை மடங்காமல் அவள் வாசம் குறையாமல் அப்படியே இன்றளவும் இருக்கிறது.

ஒரு அலுவலக நாளில் கலாசார உடையணிந்து அனைவரும் வரவேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள். அன்று முற்பகல் இடைவேளையில் நான் என் தளத்திலிருந்து படியிறங்கிக்கொண்டிருந்தேன். எதிரில் அவள் என்னைக் கடந்து படியேற நான் சற்றே திகைத்து நின்றேன்.

அதே புடவை. அதே கருஞ்சிவப்பு(maroon) நிற பட்டுப்புடவை அணிந்திருந்தாள். அந்தப் புடவையை என்னால் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது. நான் பார்த்துப் பார்த்து வாங்கிப் பரிசளித்த புடவை அல்லவா அது.

எது நடந்ததோ அது அன்று நன்றாக நடக்கவில்லை. மறந்தேன்.
எது நடக்கின்றதோ அதுவும் இன்று நன்றாக நடக்கவில்லை. சரிகின்றேன்.
எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாக நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

சில சமயங்களில் நிகழ்காலத்தை எட்டிப் பார்க்கும் இறந்தகாலம், எதிர்காலத்தை குலைத்துவிடுகிறது.

- கால‌ச்சக்கரம் சுழ‌லும்

காதலின் நான் - அத்தியாயம் எட்டு

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து 
அத்தியாயம் ஆறு
அத்தியாயம் ஏழு


என்னை அன்று மயக்கிய அந்தப் புதுநிறம் இன்று அவள் முகத்தில் காணக்கிடைக்காத பொக்கிஷமாய் மறைந்துபோயிருந்தது. ஆடம்பரம் அவள் ஆடைகளில் தெரிந்தது. எப்பொழுதும் போல் முகத்தில் அது இல்லை. காலம் அவளை வெகுவாக உருமாற்றியிருந்தது.

சக ஊழியர் ஒருவர் மூலம் அறிந்த ஒரு தகவல் என் மீதான அடுத்தகட்ட தாக்குதல். அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இத்தனை நாள் வேலையில் கொண்டிருந்த ஈடுபாடு எங்குபோனதென்று தெரியவில்லை. அலுவலகத்தின் வாயிலில் வைக்கும் முதல் காலடி தடுமாற்றத்துடனே துவங்குகிய‌து.

வீட்டில் கட்டிய மனைவியும், அலுவலகத்தில் முன்னால் காதலியும் ‍ இரவு பகல் போல மாறி மாறி என்னை முற்றுகையிடும்  மர்மம் என்ன‌?

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு
மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு
விலகத் தெரியாதா?

----

இரண்டு மனம் வேண்டும்.
இறைவனிடம் கேட்டேன்.
நினைத்து வாழ ஒன்று.
மறந்து வாழ ஒன்று.


இப்பொழுது புரிகிறது இதுபோன்ற பாடல்கள் யாருக்காக‌ எழுதப்பட்டன என்று.

ஓடி ஒதுங்கி வாழ்ந்தவன் இன்று பதுங்கி ஒழிந்து வாழ்வதில் என்ன நியாயம்
இருக்கிறது?

மழையும் வெயிலும் மாறி மாறி வரலாம். இரண்டும் ஒரு சேரத்தோன்றி என் முன் ஒரு வானவில் நிறமற்று விரிகிறது. கிரகணம் போல் இருட்டிக்கொண்டு வருகிறது. என் செய்வேன்?

நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் இல்லாத நிலை என்ன நிலை?
இடி இடிக்கிறது; மின்னல் வெட்டுகிறது; மழைவர மறுக்கும் நிலை என்ன நிலை?

என்றோ அடைய விரும்பிய காதலி இன்றளவும் கரை சேராமல் இருக்கிறாள். என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எனக்குத் திருமணமாகியிருக்கும் என்று அவளுக்கு முன்னரே தெரிந்திருக்கக் கூடும்.

இரண்டு வாரங்கள் இப்படியே கழிந்தன. அலுவலக வாயிலில் ஒரு மாலைநேரத்தில் கொட்டும் மழை நின்றபின் வீடு செல்ல காத்து நின்றேன்.

"அருண்! நீ இங்கு தான் வேலை செய்கிறாய் என்று முன்னரே தெரிந்திருந்தால் இங்கு நான் வேலைக்குச் சேர்ந்திருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடு" என்று கூறிவிட்டு இமைக்கும் கணத்தில் மழையைப் பொருட்படுத்தாமல் அவள் என்னைக் கடந்து சென்றாள்.

அன்று மாலை இடியுடன் கூடிய அடைமழை என் நெஞ்சுக்குள் பெய்ய ஆரம்பித்தது.

 - மழை இன்னும் பெய்யும்

காதலின் நான் - அத்தியாயம் ஏழு

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து 
அத்தியாயம் ஆறு

முற்றுப்பெற்ற காதல் கதைகள் தொடருவதில்லை என்று யார் சொன்னார்கள்?

பழைய நாளிதழ்களையும் பழைய பொருட்களையும் எடைக்குப் போட்டுவிடும் நாம் பழைய காதலை என்ன செய்கிறோம்?

இன்றைய காலகட்டத்தில் முகநூலிலோ அகநூலிலோ எங்கோ ஓர் மூலையில் பழைய காதலி ஒழிந்து கிடக்கத்தான் செய்கிறாள்.

இருவேறு திசை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிய முன்னால் காதலர்கள் சிற்சில ஆண்டுகளுக்குப் பின் ஓர் பயணத்தில் எதிரெதிரே சந்திக்க நேர்ந்தால் என்னவாகும்? பூமி தட்டையாகவே இருந்திருக்கலாம் என்றுகூட தோன்றும்.

உலகிற்குத் தெரியாமல் கரைந்துபோன ஒருவனின் காதல் கதை பின்னொரு நாளில் மனைவிக்குத் தெரியாமல் மீண்டும் தொடருமா தொடராதா என்று‌ யார் கண்டது?

 அந்நாளில் அவள் தந்த காதல், நட்பென்ற ஒரு குளத்தில் கல்லெறியும் சலனத்தைத் தந்தது. ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எதிர்பாராமல் சந்தித்த வேளை, ஒரு ஆழ்கடலின் அமைதியைக் குலைக்கும் பூகம்பத்தால் எழும் ஆழிப்பேரலையாக, சுனாமியாக என் உள்ளத்தில் ஒரு சலனத்தை, அதிர்ச்சியை உண்டாக்கியிருந்தது.

கணவனனென்றார்;
கட்டிய மனைவியென்றார்;
கற்பென்றார்;
கள்ளத்தனமென்றார்;

நாங்கள் மீண்டும் சந்திக்க நேர்ந்தது நான் செய்த தவறா? இல்லை நாங்கள் செய்த தவறா? தெளிந்த நீரோடையை திடீரென்று காட்டாற்று வெள்ளம் நுரைக்க வைத்து கதியற்று ஓடச் செய்வது போல் ஆகிவிட்டது மனம்.

பழைய காதலி மின்னலாய் வந்து மீண்டும் மறந்து போகலாம். நம்மை விட்டு மறைந்தும் போகலாம். ஆனால் அது என் வாழ்வில் நடக்கவில்லை. மாறாக இருவருக்கும் ஒரே அலுவலகத்தின் வெவ்வேறு தளங்களில் வேலை செய்யும் நிலை வருமென்று விதிகூட அறிந்திருக்காது.

அவளும் நோக்கினாள், அவனும் நோக்கினான் என்ற போக்கில் மீண்டெழுந்து மனச்சிறையில் மன்றாடிக்கிடந்து தவித்துக் கொண்டிருந்தது ஒரு பழைய காதல்.

 - சலனம் தொடரும்

அக்டோபர் 13, 2011

சங்கத்தில் பாடாத கவிதை (18+)

 (18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்)


ஒவ்வொரு இரவிலும்
இரண்டு அல்லது மூன்று முறை
அந்த அசம்பாவிதம் நமக்குள்
நிகழ்ந்துவிடுகிறது.

நம் உதடுகள் பரிமாறிக்கொள்ளும்
இரகசியங்களை முத்தங்கள் என்கிறார்கள்.

உன் கூந்தலோடு சேர்ந்த பூவும் மணக்கிறது.

நீ சிக்கெடுத்த கூந்தலில்
சிக்கிக் கொண்டவன் நான்.
என்னை நீ சிக்கெடுப்பது
சற்று கடினமே.

என்னால் களையப்படுவதற்காகவே
நீ செய்து கொள்ளும் அலங்காரம்
எனக்குப் பிடித்திருக்கிறது.

"என் உடையலங்காரம் எப்படியிருக்கிறது?"
என்று கேட்கிறாய்.
உன் உடையலங்கோலம் பற்றியல்லவா
நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

உன் காது மடல், கழுத்துப் பிரதேசம் என‌
பூகோள வரைபடம் ஒன்றை
வைத்துக் கொண்டு திரியும்
வாஸ்கோடகாமா நான்.

விளக்கை அணைத்துவிட்டு
உலகை இயக்கும் விளையாட்டு
அண்டத்தில் வேறுண்டா?

நம் நாலுகால் பாய்ச்சலில்
ஒரு நாகரிகம் உருவாகிறது.
உண்மை அறிவாயா நீ?

மரை கழண்ட பூமி
இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறது,
நம் கட்டில் ஆடிக்கொண்டிருப்பதைப் போல.

நாமும் இயங்குவோமாக...

ஆகஸ்ட் 25, 2011

ஒதட்டழகி



ஊருக்குள்ள ஒதட்டழகி
உன்ன விட்டா ஆரிருக்கா?
உன் ஒதட்டோர மச்சத்துக்கு
வேறேதும் பேரிருக்கா?

வடிச்சு வச்ச செலையாட்டம்
வயலோரம் நிப்பவளே!
பிடிச்சு வச்ச பிள்ளையாரா
நா மயங்கி நிக்கிறேன்டி!

உச்சி வெயுலுதான்,
உன்னப் பாத்தப்புறம்
எட்டுத்தெச மேகமெல்லாம்
கிட்ட வந்து நிக்குதடி.
காத்து என்னச் சுத்துதடி.
கனகாம்பரமும் வீசுதடி.

நீச்சத்தண்ணி சொம்புக்குள்ள‌
இனிப்பக் கலந்தியா? இல்ல‌
உன் நெனப்பக் கலந்தியா?
தொண்டக்குழி நனையுமுன்ன‌
ஒடம்பெல்லாம் சிலுக்குதடி.

பூப்பூவா இட்டிலியும்
பூண்டு மணக்க‌ சட்டினியும்
ஆவிபறக்க நீ தந்தா
அசராம எறங்குமடி.

நான் குடிச்சக் கஞ்சியில‌
கடசி பருக்க ஓஞ்சொத்தா?
மீசையில ஒட்டுனாலும்
ஆசையில கேக்குறியே!

உன் கெண்டக்காலு மஞ்சளெல்லாம்
ஊருக்கெல்லாம் சேதி சொல்ல‌
என் நாலுமொல வேட்டியில‌
நல்லாவே ஒட்டிக்கிச்சு.

எந்தக்காட்டு மழ வந்து
ஏங்கனவ கெடுத்துருச்சு?
எவன் வச்ச செய்வெனையோ?
நின்ன‌ மரம் படுத்துருச்சு.

நெஞ்சக் கீறி உள்ளார
என்னத்த பொதச்சீயோ?
வளந்து மரமா நிக்குதடி.
இரணமா குத்துதடி.

சீம‌த்தொர கெடச்சாலும்
சீமானே வந்தாலும்
நீதான்டா என் உசுரு. நாந்தான்டா உன் கொசுறுன்னு
வசனமெல்லாம் பேசுனியே?
கனவெல்லாம் வீசுனியே?

எங்கேடி போனவ நீ?
எந்தச் சீமையில வாக்கப்பட்டுப்போனவ நீ?

கூடுவிட்டு கூடுபாயும்
வித்த ஒன்னக் கத்துட்டு
நீ விரும்பும் எவனுக்குள்ளயும்
புகுந்து வாழ நான் வாரேன்.

ஆகஸ்ட் 18, 2011

மழை

முகிலெடுத்து வான்வெளி
முத்துமழை தூவியது.
மழை மண்ணைச் சேருமுன்னே
மண்வாசம் என்னைச் சேர்ந்தது.

பூக்களிலே தேனெடுத்த
பொன்வண்டுகள் காணவில்லை.
பூங்காற்றில் புழுதியெலாம்
போன இடம் தெரியவில்லை.

நீர்வடியும் இலைகளிலே
நேற்றில்லா நடுக்கங்கள்.
நீலவானில் கீறல்விடும்
நீளமான சுருக்கங்கள்.

மரக்கிளையில் பறவையெலாம்
கூடுகளில் குளிர்காய
அடிக்கடி பயமுறுத்தி
அலறுகிறது இடியோசை.

காடுகளில் நீரோட
வண்ணமயில் நீராட
ஈரக்காற்று என் ஈரல் தொட்டது.

தூரலின் இரைச்சலை
தொடங்கியதும் நான் இரசிக்க
இடைவந்த இடரொன்றாய்
தவளைகள் கர்ஜிக்க
தரைமேல் வெப்பமெலாம்
தலைதெறிக்க ஓடக்கண்டேன்.

தட்டுகளில் நீர்தெறித்து
தாளங்கள் எழுகையிலே
மிச்சமுள்ள வறட்சியெலாம்
மாண்டுபோக நான்கண்டேன்.

இறங்கிவந்து மண்மேலே
ஈரக்கவிதை மேகமெழுத
இயற்கையின் குளியலை
இரகசியமாய் எட்டிப் பார்த்தேன்.

மெய்மறந்து இரசிக்கையில்
முழுக்க நனைந்து நான் நின்றேன்.

ஆகஸ்ட் 13, 2011

காதல்

இதயத்தின் நான்கறைகளிலும்
இடியுடன் கூடிய மழை.

உன் மூச்சுக்காற்றின் மூலக்கூறுகள்
என் நுரையீரலை வட்டமிட்டபடியே.

உன் நிழல் தீண்டித்தீண்டியே
என் ரேகை தேயும்.

என் நெற்றிச் சுருக்கங்களில்
உன் நினைவு விரியும்.

ஆத்திரத்தில் நான் அரைந்தாலும்
உன் கண்களின் கார்காலம்
என் கோபத்தின் கொள்ளியை அணைத்துவிடும்.

மரணத்தின் தூண்டில் என் கண்களுக்கு
மங்கலாகத் தெரிகின்றது.

இப்பொழுது என்னுடலில்
இதயம் மட்டுமே அசைகிறது.

அன்பே! நம் மணிவிழா முடிந்தாலென்ன?
என் மனமின்னும் மார்க்கண்டேயன்,
நம் காதல் இன்றும் சிரஞ்சீவி தான்.
இது உன் கல்லறைமீது சத்தியம் கண்மணி.

ஆகஸ்ட் 08, 2011

அழகி

என் ஊரில்
நீ குடியேறிய நாள்முதலே
பூமி எனக்குப் புலப்படாமல் போனது.

ஒவ்வொரு விடியலும்,
உன்வீட்டு வாசல் ஒரு
உலகவரைபடத்தை எனக்குப் பரிசளிக்கிறது.

நான் அழுவதும் சிரிப்பதும்
அடிக்கடி நிகழ்ந்துவிடுகிறது, இப்பொழுதெல்லாம்.

நான் கண்ணிமைக்கும் கனத்தை
ஒரு இரவு தக்கவைத்துக்கொள்ளும்
அவசரம் புரியவில்லை.

இறுகப் பூமியைப் பற்றிக்கொண்டபோதும்
ஈர்ப்புவிசையை இழக்கிறேன் நான்.

என் விழித்திரைக்கும்
உலகிற்குமான இடைவெளியில்
கூடாரம் போட்டவள் நீ.

எல்லா இரவுகளிலும்
கனவும் நானும் உன்னைக் காண்கிறோம்.

நீ ஒரு பார்வை வீசிப் புறப்படும்
ஓர் அதிகாலைக் கனவில்,
என்னையறியாமல் நான் உறங்கிவிடுகிறேன்.

ஜூலை 30, 2011

காதலின் நான் - அத்தியாயம் ஆறு

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து 

அந்த இரவு எங்கள் இருவருக்கும் நேர்ந்த இடைவெளியை மீண்டும் மழை பெய்யச் செய்து நிரப்பிக் கொண்டது.

இடம் பொருள் பார்க்காமல் ஈவு இரக்கம் காட்டாமல் வருகின்ற காதல், வந்த வழியே சொல்லிக் கொள்ளாமல் திரும்பிச்சென்று விடுகிறது, மழை மேகங்களைப் போல‌.

அன்றைய மாலைப்பொழுதில் தெருவில் நின்று பிறர் காண‌ கண்ணீர் விட நேரிடும் என்று முன்னமே எதிர்பார்க்கவில்லை.

உங்களில் பெரும்பாலானோர் பின்னால் வாகனம் வருவது அறியாமல் மோதி விழுமுன் வசை வாங்கியிருந்திருப்பீர்கள் என்று தோன்றவில்லை.

டெலிபோன் பூத்தில் வரிசையில் காத்திருப்போரை மறந்து கதறும் வாய்ப்பு உங்களுக்கு கிட்டியிருக்காதென்றே நினைக்கிறேன்.

பிரிவிற்கான‌ காரணத்தைக் கண்டறிந்து களைய முற்பட்டேன். எத்தனையொ முறை மன்றாடிக் கேட்டுப் பார்த்தேன். "என்ன குறை கண்டாய் என்னில்?" என்று.

அவள் தந்த பதில்கள் அனைத்துமே மௌனம் மட்டும் தான். உலகிலேயே மிகவும் கொடூரமான‌ ஆயுதம் மௌனம் மட்டும் தான். எனக்கு அந்த மௌனம் சம்மதமில்லை.

காதல் என்ற போதைக்கு அடிமையானவனை எதுவுமற்ற அறையில் திடீரென்று அடைத்துவிட்டாள்.

மீண்டும் குழந்தையாக்கி அழகுபார்த்துவிட்டு கொடுத்த‌ பொம்மையைப் பிடுங்கிக்கொண்டாள்.

‌நம்பிக்கை துரோகம் என்பது வாழ்க்கையில் எத்தனை பக்குவப்பட்டவனையும் கூட எதற்கும் கவலைப்படாதவனையும் கூட அழவைத்துப் பார்க்கும் ஆயுதம். அவளுடைய அந்த கூர்மையான கேள்விக்கணைக்கு உள்ளான நிராயுதபாணியாகிப் போனேன்.

ஒரு உறக்கம் தொலைந்த அதிகாலையில் என் கைபேசி அழைப்புகளை ஏற்பதையும் கூட நிறுத்திக் கொண்டாள்.

அது போன்ற தருணங்களில் கோபம், வெறுப்பு, சோகம், பயம், பொறுமை: இவையனைத்தும் ஒரு சேர ஒருவனை ஆட்கொண்டால் என்னவாகும்?

பல் துலக்காமல் குளிக்காமல் அவள் விடுதியினைத் தாண்டி தினமும் அவள் செல்லும் வழியில், அடைக்கப்பட்ட ஒரு கடையின் வாசலில் அமர்ந்து இந்த வழியில் வருவாளா? மாட்டாளா என்றே தெரியாமல் காலை முதல் மாலை வரை மாலை முதல் இரவு வரை சாலையினையே வெறித்துப் பார்த்து ஏங்கிச் செத்த நிமிடங்கள் இன்னும் நெஞ்சில் இரணமாய் இருக்கின்றன‌.

எதையோ தொலைத்து விட்ட பதற்றமும் பரிதவிப்பும் மனதில் அமைதியை கலைத்துவிட்டன. ஒவ்வொரு விநாடியும் அவள் என்ன செய்கிறாள்? எங்கு இருக்கிறாள்? என்று தெரிந்து வைத்துக்கொண்டிருந்த மனம் தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் பல்லியின் உடலிலிருந்து அறுபட்ட வாலினைப் போல் துடிக்கிறது.

இந்த உலகில் நண்பர்கள் போல் நடிக்கத் தெரியாத அப்பாவிகளே காதலித்து அவதிப்படுகிறார்கள்.

நட்பையும் காதலையும் ஒரு சேரத் தொலைத்த முட்டாளாகிப் போனேன். நண்பர்கள் காதலர்களாக மாறிக்கொண்டிருக்கையில் நட்பு இருவருக்கும் உள்ள நெருக்கத்தில் நசுங்கிச் செத்துவிடுகிறது. காமம் அங்கே கால் நீட்டி உட்கார்ந்துகொள்கிறது. சிலருக்கு அது கூச்சத்தையும் வெட்கத்தையும் தருகிறது. சிலருக்கு அது வெறுப்பையும் அருவருப்பையும் தருகிறது. திருமணமானவர்களுக்கு அது நிர்ப்பந்தம். காதலிப்பவர்களுக்கு அது அவரவர் சௌகரியம்.

காதலை இழந்த துயரம் தாங்காமல் உயிரைக் கொடுக்கத் துணிவில்லாம‌ல் மயிரைக் கொடுத்து விடைபெற்ற இந்த ‌வெட்கங்கெட்டவனின் காதல் கதை அன்றோடு முடிந்துவிட்டது.

என்றோ ஒரு நாள் இடதுகையில் ஊசியால் எழுதிய அவளுடைய பெயர் சொல்லும் தழும்புகள் ‌இப்பொழுது மறைந்துவிட்டன.

முற்றும்

ஜூலை 26, 2011

காதலின் நான் - அத்தியாயம் ஐந்து

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு


நம் காலம் கடிதங்களைப் படிக்கப் பழகும் பருவம் தொட்டே எழுதப் பழகாத ஒரு சந்ததியினை உருவாக்கிவிட்டது. இன்றைக்கும் டைரி எழுதும் பழக்கமுடையவர்களைப் போல் நானும் அவளிடம் எழுதிக் காண்பித்திருக்கிறேன், சில காதல் கடிதங்களை. தினமும் பூங்காவில் சந்திக்கும் பொழுது படித்துக் காண்பித்திருக்கிறேன். மீண்டும் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறேன்.

நான் கல்லூரிக் காலங்களில் வரைந்த சில ஓவியங்களையும் கூட அவளிடம் காண்பித்து அவள் இரசிப்பதை நானும் இரசித்திருக்கிறேன். எனினும் அவளுடைய‌ புன்னகைக்கு ஈடாக ஒரு ஓவியத்தை என்னால் வரைய இயலாமலே போனது.

காமம் உடல் சம்பந்தப்பட்டதென்றால் அவளைத் தோழியாய்ப் பார்க்குமுன்னமே என்னுள் அது கிளர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். அது காதல் சம்பந்தப்பட்டதென்பதாலோ என்னவொ பின்னாளில் அவள் மீதான கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதவனாகிவிட்டேன். அடக்கிவாசிக்கத் தெரியாத காதல் ஆதிவாசி நான். வீணையின் நரம்புகளைத் தீண்டாமல் இசையெழுப்ப முடியாதென்று அவளுக்குப் புரியவைக்க விரும்பவில்லை.

சில நேரங்களில் எதற்கும் பதிலளிக்கமாட்டாள். என் மீது மௌனத்தைக் காறி உமிழ்வாள் பிறர் பார்த்து பரிகசிக்கும்படி. நானோ காதலியிடம் முத்தம் பெற்றபின் உதடுகளைத் துடைத்துக் கொள்ளும் காதலனைப் போல் நடந்துகொள்வேன். என் இத்தனை காதல் அனுபவங்களின் ஊடே எத்தனை காத்திருப்புகள், எத்தனை கைபேசி இடையூறுகள், எத்தனை பெறப்படாத பதில்கள், எத்தனை கேட்கப்படாத கேள்விகள் என்பது எண்ணிலடங்கா. இருந்தும் காதல் என்ற அந்த ஒற்றை நூல் அறுந்து விழாமல் தொங்கப் பழகும் பக்குவத்தைப் பெற்றிருந்தேன்.

என் உலகைச் சுருட்டி மடித்து வாய்க்குள் வெற்றிலையாய்ப் போட்டு மென்றவள் அவள். வெந்து சிவந்தவன் நான் தான். காதலின் முதல் சந்திப்பில் இருந்த தீவிரம் எனக்குள் வெறியாய் மாறிக்கொண்டிருந்தது. அவளுக்குள் அது நீர்த்துக் கொண்டிருந்ததை நான் அறியாமலில்லை. என் காத்திருப்புகள் அவளின் நிராகரிப்புகளாக மாற எத்தனை காலம் பிடிக்கும்? பதிலற்ற கேள்விகளுக்காய் நான் ஏன் காத்துக் கிடக்கிறேன்? அவள் இட்டுத் தொடங்கி வைத்த புள்ளிகளினூடே நான் கோலமாய் ஓடிக்கொண்டிருக்கிறேன் முற்றுப்புள்ளி இருக்கும் திசையறியாமல்.

அன்றொரு நாள் மாலை பூங்கா செல்லும் வழியில் இறுக்கமான முகத்துடன் என் மேல் வீசியெறிந்த காதல் வார்த்தைகளை அள்ள முயன்றாள். சிரிக்கக் கூடாத இடத்தில் ஒருத்தி சிரித்துத் தொலைப்பதைப் போல் கேட்கக் கூடாத இடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டுத்தொலைத்தாள்.

"நாம் பிரிந்து விடலாமா, அருண்?"

அவள் கேட்ட முதல் கேள்வி என்னைத் தொட்டிலில் போட்டது.

அந்த இரண்டாவது கேள்வி என்னைத் தூக்கில் போட்டது.

பிரிய மனமின்றி தொங்கும்...

ஜூலை 24, 2011

காதலின் நான் - அத்தியாயம் நான்கு

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று


திருமணத்திற்குப் பின் செத்துப் போய்விடுகிற பொறுமை, தூக்கில் தொங்க விட்டாலும் காதலிக்கும் பொழுது சாகாது. எங்கள் காதலின் சாராம்சமே என் பொறுமையும் அதனை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கிப் பார்க்கும் அவளுடைய‌ செய்கைகளும் தான்.

அந்த இரவின் மௌன‌த்தில் இருவரும் மெல்ல நடந்தோம், அந்த‌ மௌனத்தைக் களைக்கும் எண்ணமே இல்லாமல். அவள் முகத்தில் ஒரு குழந்தையிடம் தெரியும் பயமும், என் முகத்தில் தொலைந்த ஒன்று மீண்டும் கிடைத்த திருப்தியும் தெளிவாகத் தெரிந்தன, தெரு விளக்குகளின் மங்கிய ஒளியில் கூட.

விடுதியின் வாயிலில் சிறிய புன்னகையை உதிர்த்துவிட்டு அவளிடம் விடைபெற்றேன். அந்த இரவு மிகவும் கணமாகவும் நீளமாகவும் இருப்பதாக நினைத்துக் கொண்டே ஏதோ ஒரு தருணத்தில் உறங்கிப் போனேன்.

அழகிய தீயே படத்தில் "விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்" அடிக்கடி அவள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல். இன்றும் கூட பயணத்திலோ விடுமுறை நாட்களிலோ காதுகளை உரசி பழைய நினைவலைகளில் சலனத்தை உண்டாக்கிவிடும் பாடல் அது.

"என்னிடம் ஏதேனும் குறை இருக்கிறதா அருண்?" என்று ஏதுமறியா குழந்தையைப் போல அடிக்கடி கேட்கும் அதே கேள்வியையே கேட்டுத் தொலைப்பாள். நானும் சலிக்காமல், "தற்போதைக்கு உன்னிடம் குறையேதும் இல்லை. இருப்பின் புகார் தருகிறேன். தக்க நடவடிக்கை எடு." என்று சிரித்துக் கொண்டே பதிலளிப்பேன்.

தன் அம்மாவின் சமையலை மிகவும் நேசிப்பாள். அதனை தவறவிடுவதை எண்ணி அடிக்கடி வருத்தமடைவாள் என்னைப் போலவே. பூங்கா தவிர்த்து நாங்கள் வழக்கமாக சந்திக்கும் பழச்சாற்றுக் கடையில் அவளை அடிக்கடி காணமுடியும், என்னுடன் சேர்த்தோ அல்லது அவளுடைய நண்பர்களுடன் சேர்த்தோ. ஒரு முறை கடைக்காரர் அரை மணி நேரமாக என்ன பழச்சாறு வேண்டுமென்று எங்கள் இருவரையும் கேட்ட வண்ணம் இருந்தார். நான் அவளைக் கைகாட்ட அவள் என்னைக் கைகாட்ட அந்த விளையாட்டு எங்களுக்கு மிகவும் பிடித்தமானதாகி விட்டது.

கடலின் அலைகளைப் போன்று அவள் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பாள். கரையாய் நான் காய்ந்து நனைந்து காய்ந்து நனைந்து காத்துக் கிடந்தேன்.

அலைகள் ஓய்வதில்லை, பாயும்...

ஜூலை 20, 2011

காதலின் நான் - அத்தியாயம் மூன்று

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு

எல்லா காதலர்களையும் போல நாங்கள் பனிக்கூழ் (அதாங்க ஐஸ்கிரீம்) பார்லருக்கெல்லாம் சென்று காதலித்ததில்லை. ஆனால் ஒரு முறை தொலைபேசி உரையாடலில் நான் ஒரு படத்தின் காட்சியை அவளிடம் விவரித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஐஸ்கிரீம்னாலே அந்தக் காட்சி தான் ஞாபகத்திற்கு வருவதாய் கூறிக் கொண்டிருந்தேன். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ப்ரதாப்,‍  ஸ்ரீதேவி ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப் பார்த்து ஒரு வசனம் பேசுவார், "நான் அந்த ஐஸ்கிரீமா இருக்கக் கூடாதான்னு நெனிக்குறேன்" என்று. எங்களின் இந்த உரையாடலுக்கு நடுவில் எங்கோ யாரோ ஐஸ்கிரீமாக மாறியிருந்திருப்பார்கள் தானே?

காதலில் காத்திருப்பு எத்தனை சுவாரசியமானது தெரியுமா? அது நிழற்கடிகாரத்தில் கூட நேரம் பார்க்க விடாது. அவளுக்காகக் காத்திருப்பது ஒரு தவம். அவளின் வருகையே வரம். அது கைபேசி அழைப்பாகட்டும், வேறொரு இணைப்பு துண்டிக்கப்பட்டு என் அழைப்பு ஏற்கப்படும் வரை காத்திருப்பேன். பூங்காவாகட்டும், அவள் வரும் வரை காத்திருப்பேன். வராமல் போனாலும் கூட காத்திருப்பேன் பொறுமை தீரும்வரை.

இப்படித்தான் ஒரு நாள் மாலை நான்கு மணி இருக்கும். இன்னும் பூங்கா திறக்கப்படவில்லை. நானும் திறக்கும் வரை காத்திருந்தேன். அவளுக்காக திறந்தும் காத்திருந்தேன். யார் யாரோ வந்தார்கள். என்னை கடந்து சென்றார்கள். பூங்காவை வட்டமடித்தார்கள். நான் மட்டும் அங்கிருக்கும் சாய்ந்த நாற்காலிகளில் ஒன்றாய் அசைவற்று சாய்ந்து காத்திருந்தேன், இரவோ பகலோ பாராமல் தனிமையில் எதனையோ எதிர்நோக்கி காத்திருக்கும் ஒற்றைப் பனைமரங்களைப் போல்.

இரவு ஒன்பதுக்கு மேல் ஆகியும் அவள் வருவதாய்த் தெரியவில்லை. என் இருபத்தியோரு அழைப்புகளுக்கும் எந்த பதிலும் இல்லை. என்ன ஆயிற்றோ? ஏது ஆயிற்றோ? என்ற படபடப்பு ஒரு பக்கம்.  பூங்கா கதவடைத்த சோகம் ஒரு பக்கம். எத்தனை தவிப்பு. எத்தனை எதிர்பார்ப்பு. எச்சில் கூட விழுங்காமல் ஏனோ இத்தனை தீவிரம். அழைப்பேதும் வரவில்லை. அவளே வந்தாள். மணி ஒன்பது நாற்பது. அந்த பெயர் மறந்த இளைஞன் பத்து நிமிடங்களுக்கு முன் தான் சென்றிருந்தான்.

என் காத்திருப்பும் பரிதவிப்பும் நான் சொல்லாமலே இது காதலென்று அவனுக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.

காத்திருப்பு முடிவுற்ற‌ நிலையில் தொடரும்...
 

ஜூலை 19, 2011

காதலின் நான் ‍‍- அத்தியாயம் இரண்டு

அத்தியாயம் ஒன்று


பேருந்துப் பயணத்தில் தன்னை அறியாமல் நம் தோளில் தலைசாய்த்து உறங்கும் சக பயணியை எழுப்பிவிடக்கூடாதென்ற அக்கரையில் தொடங்குகிறது மனிதர் மனிதர் மீது காட்டும் அன்பு. அப்படி இருக்கையில் என்னை மனதார புரிந்து வைத்தவள்; என்னை முழுவதும் நேசிப்பவள்; என்னோடு வாழ்க்கை முழுவதும் பயணிக்க விரும்பும் ஒருத்தி; அவளை நினைக்கும் பொழுது வாழ்க்கை எத்தனை ரம்மியமானது என்று மனம் சிட்டாய்ப் ப‌றக்கத் துடிக்கிறது. அவளிடம் நான் எத்தனை அக்கரையுடையவனாக நட‌ந்து கொள்ள வேண்டும் என்ற படபடப்பு நெஞ்சைப் பற்றிக் கொள்கிறது.

அவளுடைய உதடுகள் பெரும்பாலும் சிரிப்பை மட்டுமே சிந்திப்பவை. இந்தப் புன்னகை என்ன விலை என்று கேட்காதீர்கள். அது வாடகைக்குக் கூடக் கிடைக்காது. மொத்தமாய் நான் குத்தகைக்கு எடுத்துவிட்டேன். நட்பில் அவள் புன்னகையை தள்ளி நின்று தரிசித்தேன். பின்னர் காதலித்தேன். அது தேன்.

எங்கள் வாழ்வின் பக்கங்களை எழுதிச் செல்ல ஒரு நோட்டுப் புத்தகம் வாங்கி பூங்கா வந்தேன், ஓர் அந்திப் பொழுதில். என் பெயரை எழுதினேன். எதுவும் நடக்கவில்லை. அருகில் அவள் பெய‌ரை மிகுந்த கவனத்துடன் எழுதினேன். இல்லை. இல்லை. வரைந்தேன் என்று வைத்துக் கொள்வோமா. இல்லை. இல்லை. தீட்டினேன் என்று வைத்துக் கொள்வோம். தீட்டி முடிப்பதற்குள் தாளுக்கும் பேனாவுக்குமான இடைவெளியில் காற்றில் மகரந்தமாய் அவள் பெயர் பிரிந்து பறந்து சென்றதை நான் கவனிக்கவில்லை. பூங்கா வாசம் வீசிப் புறப்பட்டது. தென்றல் தரையிறங்கியது. செடிகள் நடனமாடின. அவள் வருமுன் அவளின் வாசம் என்னைச் சேர்ந்தது, மழை வருமுன் மண்ணைச் சேரும் வாசம் போல. அருகினில் அமர்ந்தாள். தொலைவினில் உலகம் நகர்ந்து கொண்டது. இருவருக்கும் உள்ள இடைவெளி குறைந்திருந்தது. கேள்விப்பட்டிருக்கிறேன், இரண்டு மனிதர்களுக்கிடையில் இருக்கும் மிகக்குறைந்த இடைவெளி ஒரு புன்னகை என்று. அது அவளிடம் நிறையவே இருக்கின்றது, சேமித்து வைத்து கண்டபடி செலவு செய்ய‌.

சில நாட்கள் ஊருக்குப் போய்விடுவாள். தண்ணீர் ஊற்ற யாருமில்லாமல் வாடும் செடிகளைப் போல் நானும் வாடிப்போவேன். மீண்டும் தளிர்க்க அவள் இரயிலேறி வரவேண்டியிருந்தது.

அவளுக்கு நண்பர்கள் சற்றே அதிகம். காதலன் நான் மட்டும்தான். அவளிடம் இருப்பது கைபேசியல்ல‌, காதுபேசி. அவளுடைய கைகளில் இருக்கும் கணங்களை விட அதிகம் காதுகளிலேயே இருக்கும் கருவி அது. சுதந்திர தினத்தில் சட்டையில் தேசியக் கொடி குத்திக் கொள்கிறாளோ இல்லையோ, எல்லா தினங்களிலும் அவள் தன் நண்பர்களை நெஞ்சில் குத்திக் கொண்டுதான் திரிந்தாள். த‌ன் நண்பர்களுக்காக எதையும் செய்ய ஆசைப்படுபவள், நான் கேட்கும் முத்தங்களுக்கு பதிலளிப்பதில்லை.

காதல் வளர்ந்துகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில் தொடரும்...

ஜூலை 17, 2011

காதலின் நான் ‍‍- அத்தியாயம் ஒன்று


காதலைப் பேசியிருப்பீர்கள். காதலைப் பழித்திருப்பீர்கள். காதலித்திருக்கிறீர்களா என்பது தான் என் கேள்வி.

சும்மா சிரித்துப் பேசியவள், மெனக்கெட்டு கவர்ந்திழுக்கப்பட்டே காதலியானவள், படிப்ஸ் காதல்கள் இவைகளெல்லாம் காதல் என்பீர்கள். நான் இல்லையென்பேன்.

அது முட்டாள்களுக்கே வரும் உணர்வு. அல்லது அறிவாளிகளை முட்டாளாக்கும் முறை.

அது வராது. வந்தால் போகாது. அப்படிப்போனால் அது வரவேயில்லை என்பது தான் உண்மை.

உண்மையான காதலின் அர்த்தம் சொல்கிறேன். அனுபவம் கேட்கிறேன். உண்டா?

இரண்டு வருட நட்பு காதலாய் மாறிய தருணம் அது. அப்போது சிந்திக்க‌வில்லை, மீண்டும் அது நட்பாக மாற வாய்ப்பே இல்லையென்று. வழக்கமான ஓர் இரவின் நீண்ட நெடிய கைபேசி உரையாடலின் ஓரிடத்தில் உடைந்து சிதறி அவளுடைய குரல் என்னில் விழுந்து தெறித்தது.

'என்னை மணந்து கொள் என்றால் நீ சம்மதிப்பாயா அருண் ?'

இரண்டு நிமிடங்கள் கைபேசிகள் இரண்டும் மௌனம் சாதித்தன. நான் இணைப்பை துண்டித்து விட்டேன். குறுக்கும் நெடுக்கும் நடந்தேன். சர்க்கரை நோயாளியாய் மாறிப்போனேன். இதயம் அதிகமாய் படபடத்தது. வியர்த்துக் கொட்டியது. ஒரு பதின்மூன்று முறை அவளை மீண்டும் அழைக்க முயர்சித்தும் தோல்வியடைந்தேன். படுக்கையில் புரண்டு புரண்டு மணி இரண்டாகிப் போனது. என்ன நினைத்தேனோ தெரியவில்லை. தைரியம் வரவழைத்து அவளை அழைத்தேன். தாமதித்தே அழைப்பை ஏற்றாள்.

சிறிய இடைவெளி விட்டு "இணைப்பில் இருக்கிறாயா?" என்றேன். ம் என்றாள். அவள் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கிறாள். அது தெரியாமல் சம்மதம் சொல்லிப் பூரித்தேன், மதில் சுவரை காதலியாய் பாவித்து காதலைச் சொல்ல ஒத்திகை பார்க்கும் ஒரு காதலனைப் போல்.

மறுநாள் 'வழக்கம்' போல் விடிந்தது எங்களுக்குப் பிடிக்கவில்லை. யாரிடமும் சொல்லவுமில்லை. இந்த உலகில் எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று அதுவாகிப் போனது.

இரண்டு வருட நட்பு அன்றோடு பறிபோனது பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் அதே பூங்காவில் மாலை சந்தித்தோம், முதலிரவில் சந்திக்கும் இளம் தம்பதிய‌ரின் மன‌நிலையுடன்.
ஒரு பெயர் மறந்த இளைஞ‌ன் எங்கள் பூங்கா நண்பன். தன் அக்காவின் குழந்தையுடன் வரும் அவன் எங்களை அண்ணா அக்கா என்றே அழைப்பது வழக்கம். அன்றும் அப்படியே அழைத்தான். அவள் என்னை நோக்க நான் அவளை நோக்க நாங்கள் இருவர் சிந்திய புன்முறுவலில் காதல் பிறந்தது.

நான் மழைக்குக் கூட கோவிலில் ஒதுங்காதவன், அந்த இரவின் சாரல் மழையில் அவளுக்காக ஒதுங்கினேன். அவள் என்னை அர்ச்சனைக்கு அழைக்கமாட்டாள் என்று எனக்குத் தெரியும். இருந்தும் கூடவே சென்றேன். கண்களில் ஒற்றிக்கொண்டு துள‌சி வாங்கினாள். நான் குங்குமம் பெற்றேன். அடுத்து என்ன நடந்திருக்குமென்று இப்போது நீங்கள் யூகிப்பது எனக்குப் புரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதான் நடந்த‌து. அவள் எதிர்பாராமல் அவள் நெற்றியில் திலகமிட்டேன். எத்தனை சினிமா பார்த்திருக்கிறோம், இது கூடத் தெரியாத மரமண்டையா நான்.  அது இருக்கட்டும், அவள் கண்கள் கலங்கியிருந்தன. மழை குறைந்திருந்தது.

ஒரு குடையின் கீழ் இருவரும் நடந்தோம். குடையும் மழையும் எங்களுடன் சேர்ந்தே நடந்தன.  மழைத்துளி படாமலிருக்க நாங்கள் நன்றாகவே பட்டுக்கொண்டோம். இந்தக் குடையின் அளவிலேயே ஒரு குடிலும் வாகனமும் இருந்தால் வாழ்க்கை எத்தனை அழ‌காக பயணித்திருக்குமென்று நினைத்துக் கொண்டே நடந்தோம். அவளையும் குடையினையும் அவளுடைய விடுதியில் விட்டுவிட்டு  நானும் மழையும் மெல்ல நடந்தோம் அடுத்த தெருவில் உள்ள என் அறை நோக்கி. எங்கள் முதலிரவு அன்று நடக்கவில்லை.

காதல் வளரும் என்ற நம்பிக்கையில் தொடரும்...

ஜூலை 01, 2011

என் இறந்தகாலம்

இது என் இறந்தகாலம் பற்றி நான் எழுதும் சுய இரங்கல் கடிதம். முடிந்தவரை எழுதக்கூடாது என்பதையே தீர்மானமாகக் கொண்டிருந்தேன். எழுதித்தான் ஆகவேண்டுமென்று ஏதோ ஒரு தருணத்தில் இரக்கமின்றி இக்கடிதத்தை எழுதிவிட எத்தனித்துவிட்டது என் அடங்காமனம்.

தேனிப்பக்கம் ஒரு சிறிய கிராமத்தில், 26 வருடங்களுக்கு முன்னர் பிறந்தவளும், 10 வருடங்களுக்கு முன்னர் இறந்தவளும் நான். என் அப்பா ஒரு லாரி ஓட்டுநர். அம்மா ஒரு சத்துணவுக்கூட ஊழியர். எனக்கு ஒரு சகோதரன், ச‌கோதரி. வீட்டிலும் சரி, வாழ்விலும் சரி, நான் கடைக்குட்டி. 3 வயதுவரை ஓடியாடி விளையாடிக்கொண்டு தான் இருந்தேன். ஒரு நாள் கால் தவறி சாக்கடையில் விழுந்துவிட்டேன். அன்றே காய்ச்சலில் படுத்தேன். நாட்கள் சென்றன. என் கால்கள் செயலிழந்தன. நாட்கள் சென்றன. சரியாக வார்த்தைகளை உச்சரிக்கப் பழகுமுன்னே பேச்சை இழந்தேன். என் உடலில் இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது; இதயம் துடித்துக்கொண்டிருந்தது. உணவு உட்சென்று வெளிச்சென்று கொண்டிருந்தது. சில நேரம் சிரிப்பும், சில நேரம் அழுகையும், சிணுங்கல்களும் இன்னும் சில புரியாத உணர்வுகளையும் வெளிக்காட்டுவேன். வாழ்க்கை அவ்வளவே. என்னைத் தரையில் போட்டால் முதுகுப்புறம் காப்புக்காய்த்து விடுமென்று தொட்டிலில் கிடத்திவிடுவார்கள். என் வாழ்நாளில் ரொட்டியும் பாலும் மட்டுமே உயிர் நாடிக்கு உரமாயின. முடிந்த அளவு முயற்சித்தும் மருத்துவமோ மாந்திரீகமோ கைகொடுக்கவில்லை.

என்னோடு வாழ்ந்து எனக்கு முன்னரே இறந்த ஒரு ஜீவன், என் அப்பத்தா மட்டும் தான். அவளுக்கும் எனக்கும் ஒரே வேறுபாடுதான். அவளுக்கு எல்லாம் தெரியும். எனக்கு எதுவுமே தெரியாது. அவ்வளவுதான்.

எங்கள் வீட்டில் ஒரு மேசைக் கடிகாரத்தைப் போல், ஒரு சுவர் கடிகாரத்தைப் போல், நானும் ஒரு அசையாப் பொருளாய்த் துடித்துக் கொண்டிருந்தேன், எந்த நாளில் என் நொடிமுள் நிற்குமென்று தெரியாமல். நீங்கள் சந்தித்திராத அனுபவங்களை நான் சந்தித்திருக்கிறேன். ஒரு சுவரில் ஊரும் பல்லி கண் சிமிட்டுவதை, இன்னொரு பல்லி அதனை புணர்ந்துவிட்டு செல்வதை, ஒரு பூ மொட்டுவிட்டு மலர்வதைக் கண்கூடாகக் காணுவதைப் போன்ற அனுபங்களைப் பெற்றிருக்கிறேன். நான் வாழ்ந்துகொண்டிருப்பதாய் உணர்வதைவிட மற்றவர்களின் வாழ்வை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதே உண்மை.

எல்லோரும் வளர்ந்தார்கள். நான் மட்டும் சுருங்கினேன், தலையைத் தவிர்த்து. இரத்தம் சுண்டி வெளிர் மஞ்சள் நிறத்தில் என்தோல் மாறிப்போனது. என் அப்பா என்னை மட்டும் சிவப்பாகப் பெற்றதாக அடிக்கடி பெருமை கொள்வார். வாரத்தில் இரண்டு நாளேனும் தொட்டிலுக்குள் தலைவிட்டுப் பார்ப்பார். ஓரிரு வார்த்தைகளில் கொஞ்சுவார். அந்த ஒரு சிறிய மகிழ்ச்சியை மட்டுமே அவருக்கு என்னால் அளிக்க முடிந்தது.

என் உடலில் பெண்மையை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தது என் கூந்தல் மட்டுமே. அதனையும் மூன்று மாதங்களுக்கொருமுறை கத்தரித்து எறியும் பொழுதெல்லாம் என் அம்மா அழுதுகொண்டு தான் அதனை செய்து முடிப்பாள்.

எத்தனையோ நாட்கள் எறும்புகளுக்கு இரையாகிருக்கிறேன், எந்த சலனங்களும் காட்டாமல். பள்ளி முடிந்து வீடு திரும்பும்‌ என் அக்கா கதறித் துடித்து என் கண்களை மேயும் எறும்புகளைக் களைவாள். என் அண்ணன் கண்கள் பொங்கி எட்ட நின்று பார்த்துக் கொண்டிருப்பான்.

என்னைச் சுற்றி வீசும் மூத்திர நெடி என் குடும்பத்தின் ஒரு அங்கமாகிப் போனது.

ஒருவேளை என் பிறப்பை தள்ளிப்போட்டிருந்தால் எனக்குப் பதில் யாரோ பிறந்திருப்பார்கள். நான் தப்பித்திருப்பேன். பாருங்கள், என் பிறப்பை தள்ளிப்போடத் தெரியாத என் பெற்றோருக்கு என் இறப்பை இத்தனை காலம் தள்ளிப்போடத் தெரிந்திருக்கிறது.

என் அம்மா நான் இருந்தும் அழுதாள். செத்தும் அழுதாள். நான் மட்டும் எப்பொழுதும் போல் சலனமற்றே கிடக்கிறேன். என்னை நான்குபேர் தூக்கிச் செல்கிறார்கள். நான் வானம் பார்க்கிறேன். இத்தனை வருடங்களாகியும் அது நிறம் மாறவே இல்லை. என் இறந்தகாலத்தின் ஏதொ ஒரு மாலைப்பொழுதில் எவரும் அறியாமல் என்னையும் அறியாமல் நான் பூப்பெய்திருப்பேனா என்று நினைத்துப் பார்க்கிறேன். வாழ்க்கை அற்புதம். சிலருக்கு அது சொர்க்கம். சிலருக்கு அது நரகம்.
 

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

ஜூன் 21, 2011

சென்னை மாநரகம்

இந்தப் பதிவைப் படித்து நேரத்தை வீணடிப்பது உங்கள் பிரியம். மீறி வீணடித்தால் நான் பொறுப்பல்ல.

தொழிலும் தொழில் சார்ந்த இடமும் சென்னை என்றாகிவிட்டது. இனி செத்தாலென்ன. பிழைத்தாலென்ன. வீட்டிலிருந்து இங்கு விரட்டியடிக்கப்பட்ட ஜென்மங்க‌ளுக்கு இந்தப் பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்.

துபாய், சிங்கப்பூருக்கு இது தேவலை என்று சப்பைக்கட்டு கட்டும் கனவான்களே!
கைபேசிக்குள் குடும்பம் நடத்தும் மென்பொருள் அநாதைகளே! நலமா? "ஆம். நலம்" என்ற‌ கொடூரமான பொய்யை சர்வ சாதாரணமாக‌ச் சொல்லப் பழகிவிட்டீர்கள், போகட்டும் விடுங்கள்.

அது என்ன? ஆம்பூர் ப்ளைன் பிரியாணியா சாப்பிடுகிறீர்கள்? கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டால் அடடா! என்ன ருசி?  தவுட்டையும் புண்ணாக்கையும் கலந்து அடித்தாற்போல் இருக்கும். அருகில் தண்ணீர் இல்லையேல் விக்கிச் சாவுங்கள்.

சென்ற நேர்முகத்தேர்வில் சொதப்பிய கடுப்பும் வெளியே வந்து ஒண்ணுக்கு அடிக்க இடம் கிடைக்காமல் சென்னை வீதிகளில் அலைந்து திரிந்த சோகமும் உங்கள் முகத்தில் தெரிகிறது நண்பா. மனம் தளராதே. இடம் கிடைக்கும் இரண்டுக்கும். விடாமல் தேடு.

ஆங்கிலம் சரியாக வராமல் கால் சென்டரில் 'ஐ ஆம் லைக் ஆக்டர் விஜய். ஹி குட் ஆக்டிங்' என்று குரூப் டிஸ்கஷனில் குண்டியைத் தூக்கிய கண்மணிகளே! கவலை வேண்டாம். வேறு எங்காவது ஒரு விஜய் ரசிகர் பேனலில் இருப்பார்.

எதிலுமே சேராத மூன்று வகையறாக்கள் உண்டு இங்கே.
ஒன்று, சினிமா எடுக்கப் போய் மூன்று வருடமாகியும் சொந்தாமாய் ஒரு ஜட்டிகூட எடுக்காத சங்கர்கள்.
இர‌ண்டாவது, எஸ். ரா வையும் மனுஷ்யபுத்திரனையும் இரண்டுமுறை புத்தகக் கண்காட்சியிலோ வேறு எங்காவதோ பார்த்துவிட்டு பல வருடங்களுக்கு அதையே பீற்றிக்கொண்டு அலையும் இலக்கிய எத்தர்கள்.
மூன்றாவது, இவர்கள் தான் அதிமேதாவிகள். அரசியல், கலை, வரலாறு எல்லாம் பேசுவார்கள். சீமான், சாரு, மார்க்ஸ், பெரியார்தாசன் பேச்சைக்கேட்டாலே அப்படியே புல்லரித்து விடும் இந்தப் புரட்சிப் புடுங்கிகளுக்கு.

உலகில் பழக முடியாத ஒரு மொழி ஒன்று உண்டென்றால் அது இதுதான். கீழே படியுங்கள். பேருந்தில் ஒரு பெண், இல்லை, ஒரு மாமி (ஆபிசர் மாறியே இருப்பாங்க) நடத்துநரிடம் கேட்கிறார். வேகமாகக் கேட்கிறார்.

'ஒடபயனிகு உரு டிகுடு குடுபா' ‍

இதன் தமிழ் அர்த்தம் கீழே

'வடப‌ழனிக்கு ஒரு டிக்கெட் கொடுப்பா'

தீபாவளிக்கு முதல் நாள் கிளம்பி தீபாவளியன்று மதியம் ஊருக்குப் போய்ச் சேர்ந்தவுடன் பெருமூச்சு விடுவீர்கள். "அப்பாடா! தீபாவளி முடிந்துவிட்டது. ம்மா. ப்பா. நான் கிளம்பறேன். தீபாவளி லீவு முடிந்துவிட்டது." அப்பா சொல்லுவார். "இந்த எலவுக்கு நீ வராமலே இருந்திருக்கலாம்".

பொங்கலுக்கும் ஒரு நாள் விடுமறை. இதெல்லாம் ஒரு டமில் பண்டிகையா என்று ஊருக்குப் போகாமல் விட்டு விடுவீர்கள். ஏரியாவுக்குள் ஓட்டல்கள் இல்லாமல் ஒரு வாரம் சோற்றுக்குச் சிங்கி அடித்திருப்பீர்கள் என்பதை யாரிடமும் நீங்கள் பகிர்ந்திருக்க வாய்ப்பில்லை.

மெட்ரோ இரயிலோ, மெரினாவின் அலைகளோ உங்களின் வெளிக்கொணரா சோகங்களை, இழிவுகளை, ஏக்கங்களை, தனிமைகளை விழுங்கிச் சென்று மீண்டும் திரும்பும் மிச்சமிருக்கும் வாழ்ப்படா உங்கள் வாழ்க்கையினை நக்கிச் செல்ல‌.

நகரம் ‍‍‍ நரகம், மாநரகம். இது எழுத்துப் பிழையில்லை. உங்கள் வாழ்க்கைப் பிழை.

ஜூன் 18, 2011

அநாதைப் பிணம்

ஆயிரக்கணக்கில் ஈக்கள்,
ஆறேழு காக்கைகள்,
ஏராளமாய் எறும்புகள்,
இரண்டு நாய்கள்.
இத்தனை உறவுகளைக் கொண்டது,
ஒரு அநாதைப் பிணமா?

மே 31, 2011

காதல் கசக்குதையா!

இப்பொழுதெல்லாம் "உங்கள் திருமணம் காதல் திருமணமா? நிச்சயித்த திருமணமா?" என்று கேட்பது வாடிக்கையாகிவிட்டது. இன்றைய சூழலில் பெரும்பான்மையானோர் கூறும் பதில் காதல் திருமணம் என்ப‌துதான். அடுத்த கேள்வி என்ன‌வாக இருக்கும் என்று நீங்கள் யூகிப்பது சரியே. "எங்கு எப்படி காதல் உருவானது?" என்பது தானே. அதற்கும் பதில்கள் வரும் பாருங்க‌ள். அவை அனைத்தும் பெரும்பாலும் ஒரே மாதிரியானவையாகவே இருக்கும். பக்கத்து வீடு, எதிர்வீடு,  பேருந்தில் தினமும் பயணிப்பவர், அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்,  பள்ளி கல்லூரியில் உடன் படித்தவர், தெருவில் நின்றவர், போனவர், வந்த‌வர், ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்தவர் என நீண்டு கொண்டே போகும் பதில்களை கேட்டுக் கேட்டு நாம் சலித்துவிட்டோம்.



நான் எதிர்பார்த்த பதிலை ஒருவர் கூட இதுவரை கூறியதே இல்லை.  நான் என் மனைவியை காதலிக்கிறேன் என்றோ முதன்முதலில் பெண் பார்க்க செல்லும் போது காதல் வந்தது என்றோ ஏன் பதில் வருவதே இல்லை. இந்த வீணாப்போன காதலுக்கு எழுபத்திரெண்டு விளக்கங்கள் கவிதைகள் வேறு.

ச‌ரி. நம்முடைய கலாசாரத்தில் ஒரு அரை நூற்றாண்டு பின்னோக்கிப் போய் பார்த்தோமேயானால் காதல் என்று ஒன்றோ காதல் திருமணம் என்று ஒன்றோ இருந்திருக்க வாய்ப்பிருந்ததா என்றால் இல்லை. இன்னும் பின்னோக்கி தொன்மையான இலக்கியங்களை அலசி ஆராய்ந்தால் "அகத்திணை", "அகநானூறு" போன்ற இலக்கியங்கள் தலைவன் தலைவி காதலைப் புட்டுப் புட்டு வைக்கிறது. இவை அனைத்துமே திருமணத்திற்குப் பிறகு நடக்கும் காதல் மட்டுமே.

அப்படியானால் இக்காலகட்டத்தில் நிலவும் காதலும் காதல் திருமணங்க‌ளும் எங்கிருந்து வந்தன? சனியன் பிடித்த சினிமாவைத் தவிர வேறெங்கிருந்து வந்திருக்க முடியும். சொல்லுங்கள்.

சினிமாவில் தியாகராஜ பாகவதர் துவங்கி இன்றைக்கு சாந்தனு, அதர்வா வரை காதல் தானே செய்கிறார்கள். அது என்னவோ ஒன்று மட்டும் புரியவேயில்லை. ஆணும் பெண்ணும் காதலிக்காமல் சினிமா காட்டவே கூடாதா? இதுவரை வந்த சினிமாக்களை வைத்து காதல் செய்ய கோடி வழிகள்னு புத்தகமே போடலாம்.

ஆலிவுட்ல என்னடான்னா ஒருவன் குரங்கு ஒரு பெண்ணை காதலிப்பது போல் காட்டும் அளவுக்குப் போய்விட்டான். இன்னொருவன் அவதார்னு பிரம்மாண்டமாக படமெடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் காட்டுவது வேற்றுகிரக பெண்ணை கூட விட்டு வைக்காமல் கதையின் நாயகன் காதலிப்பதுபோல். இந்திய சினிமாக்கள் இதைவிட மோசம். ஊருக்குள்ளே பொறுக்கி தின்பவன், ரௌடி, மொள்ளமாரி இவர்களையே பெண்கள் விரும்புவார்கள். இடைப்பட்ட காலத்தில் வந்த படங்களில் ஏழைக் கதாநாயகன் பணக்கார திமிர்பிடித்த கதாநாயகியை அடக்க அவளுக்கு இவர் மேல் காதல் வந்துவிடும். அட, அதை கூட விட்டுவிடலாம். இன்றுவரும் படங்களில் வரும் காதலை என்ன தெய்வீகமாகக் காட்டுகிறார்கள் தெரியுமா?  ஒருபெண்ணைப் பார்த்தவுடனே காதல் வந்துவிடுகிறது. கதாநாயகன் பத்து பேரை அடித்து துவம்சம் செய்ததுமே காதல் வந்துவிடுகிறது. நாய் மாதிரி பின்னாடியே சுற்றினால் காதல் வருகிறது. அது ஏன் ஒரு ஐம்பது அறுபது வருடங்கள் முன்னாடி வாழ்ந்த நம்ம தாத்தாவுக்கு தாத்தாக்கள் காலத்தில் இப்படிப்பட்ட காதல்கள் வந்ததேயில்லை?

இங்கே சினிமாவில் ஒரு டைட்டானிக் கப்பலை கவிழ்ப்பதற்குக் கூட‌ காதல் தேவைப்படுகிறது. காதலே பிடிக்காத கதா நாயகன் கடைசி கட்டத்தில் காதலில் விழுவது போல் கண்ணாமூச்சி காட்டுகிறார்கள். காதலியைக் கைப்பிடிக்க ஒருவன் வேலை வெட்டி இல்லாமல் சாணி அள்ளுவதும், காதலிக்காக ஒருவன் பிச்சை எடுக்கும் நிலைக்கு வருவதும் சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்தில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இங்கு கேடுகெட்ட இளைஞர் காதலை செய்யத் தூண்டுபவை இந்த கேடுகெட்ட சினிமாக்களே. அதிலும் அபூர்வமாய் சில திரைப்படங்கள் உன்னதமான முறையில் வாழ்வியலையும் காதல் தோன்றும் விதத்தையும் கூறியிருக்கின்றன. அவற்றுள் சில "In the mood for love", "முதல் மரியாதை", "நள தமயந்தி‌" போன்ற சொற்ப எண்ணிக்கையில் உள்ளன. காதல் தானாக வரும், சொல்லிவிட்டு வரும், பார்த்ததும் வரும், பார்க்காமலே வரும் என்பதெல்லாம் சினிமாவால் உருவான பெரும் மாயையே தவிர வேறொன்றுமில்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்த தருணத்தில் எனக்குள் இளையராஜா தோன்றி பாடும் வரிகள் இதோ:

இந்தக் கால இளைஞர் செய்யும் காதலுக்கு
இளையராஜா எந்தன் பாட்டிருக்கு...
வீட்டுல அத‌ பாடுங்க பொண்டாட்டிய லவ் பண்ணுங்க
நம்ம தகப்பன் பேச்ச தாயின் பேச்ச மதிக்கணும்
நீயாக பெண் தேடக் கூடாது எனக்கிந்த
(காதல் கசக்குதையா...)

ஏப்ரல் 21, 2011

காரணங்களற்றவை

ஒருவனுக்குத் தூக்கம் வராமலிருக்க எதுவேண்டுமானாலும் காரணமாயிருக்கலாம். மன அழுத்தமோ, சோர்வோ, பயமோ, குழப்பமோ காரணமாயிருக்கலாம். சிலருக்கு காரணங்களே தேவையில்லை. ஓர் இரவு முழுவ‌தும் தூக்கம் வராமல் இருக்கலாம் எந்தக் காரணங்களுமே இல்லாமல்.‌
அதேபோல் ஒரு பார்வைக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்பார்கள். எந்த அர்த்தமுமே சொல்லாத ஒரு பார்வைக்குக் கூட காரணமற்ற நிலையே ஒரு அர்த்தமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. தேநீர் கோப்பைக்குள் மூழ்கிவிட்டு, பார்வையை எங்கோ நிறுத்தி, மனதை எங்கோ அசை போடுவது, நம்மில் அனைவருமே அன்றாடம் அனுபவிக்கும் ஒரு நிகழ்வு.

தரையில் நீர்கோலம் போடுவதும், நிழலை நகர்த்தி விளையாடுவதும், கழிவறையில் கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருப்பதும் காரணங்களின்றியே நிகழ்கின்றன.

காரணங்களற்ற நம் செய்கைகளில் படபடப்போ பரபரப்போ காணப்படுவதில்லை. அவை திறந்தவெளிகளைப்போல் பரந்து விரிந்த வானத்தைப் போல் எல்லையற்றுக் கிடக்கின்றன, விவாதிக்கப்படாமலேயே.
ப‌யணிகளின்றி செல்லும் மின்சார இரயில் பெட்டிகளைப் போன்றோ, தேநிலவில் தனித்தனியாய் உறங்கும் இளம் தம்பதிகளைப் போன்றோ, வாழ்க்கை காரணங்களின்றியும் பயணித்துக் கொண்டுதானிருக்கிறது.

அருண் சரவணன்
ஏப்ரல் 2011