இது என் இறந்தகாலம் பற்றி நான் எழுதும் சுய இரங்கல் கடிதம். முடிந்தவரை எழுதக்கூடாது என்பதையே தீர்மானமாகக் கொண்டிருந்தேன். எழுதித்தான் ஆகவேண்டுமென்று ஏதோ ஒரு தருணத்தில் இரக்கமின்றி இக்கடிதத்தை எழுதிவிட எத்தனித்துவிட்டது என் அடங்காமனம்.
தேனிப்பக்கம் ஒரு சிறிய கிராமத்தில், 26 வருடங்களுக்கு முன்னர் பிறந்தவளும், 10 வருடங்களுக்கு முன்னர் இறந்தவளும் நான். என் அப்பா ஒரு லாரி ஓட்டுநர். அம்மா ஒரு சத்துணவுக்கூட ஊழியர். எனக்கு ஒரு சகோதரன், சகோதரி. வீட்டிலும் சரி, வாழ்விலும் சரி, நான் கடைக்குட்டி. 3 வயதுவரை ஓடியாடி விளையாடிக்கொண்டு தான் இருந்தேன். ஒரு நாள் கால் தவறி சாக்கடையில் விழுந்துவிட்டேன். அன்றே காய்ச்சலில் படுத்தேன். நாட்கள் சென்றன. என் கால்கள் செயலிழந்தன. நாட்கள் சென்றன. சரியாக வார்த்தைகளை உச்சரிக்கப் பழகுமுன்னே பேச்சை இழந்தேன். என் உடலில் இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது; இதயம் துடித்துக்கொண்டிருந்தது. உணவு உட்சென்று வெளிச்சென்று கொண்டிருந்தது. சில நேரம் சிரிப்பும், சில நேரம் அழுகையும், சிணுங்கல்களும் இன்னும் சில புரியாத உணர்வுகளையும் வெளிக்காட்டுவேன். வாழ்க்கை அவ்வளவே. என்னைத் தரையில் போட்டால் முதுகுப்புறம் காப்புக்காய்த்து விடுமென்று தொட்டிலில் கிடத்திவிடுவார்கள். என் வாழ்நாளில் ரொட்டியும் பாலும் மட்டுமே உயிர் நாடிக்கு உரமாயின. முடிந்த அளவு முயற்சித்தும் மருத்துவமோ மாந்திரீகமோ கைகொடுக்கவில்லை.
என்னோடு வாழ்ந்து எனக்கு முன்னரே இறந்த ஒரு ஜீவன், என் அப்பத்தா மட்டும் தான். அவளுக்கும் எனக்கும் ஒரே வேறுபாடுதான். அவளுக்கு எல்லாம் தெரியும். எனக்கு எதுவுமே தெரியாது. அவ்வளவுதான்.
எங்கள் வீட்டில் ஒரு மேசைக் கடிகாரத்தைப் போல், ஒரு சுவர் கடிகாரத்தைப் போல், நானும் ஒரு அசையாப் பொருளாய்த் துடித்துக் கொண்டிருந்தேன், எந்த நாளில் என் நொடிமுள் நிற்குமென்று தெரியாமல். நீங்கள் சந்தித்திராத அனுபவங்களை நான் சந்தித்திருக்கிறேன். ஒரு சுவரில் ஊரும் பல்லி கண் சிமிட்டுவதை, இன்னொரு பல்லி அதனை புணர்ந்துவிட்டு செல்வதை, ஒரு பூ மொட்டுவிட்டு மலர்வதைக் கண்கூடாகக் காணுவதைப் போன்ற அனுபங்களைப் பெற்றிருக்கிறேன். நான் வாழ்ந்துகொண்டிருப்பதாய் உணர்வதைவிட மற்றவர்களின் வாழ்வை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதே உண்மை.
எல்லோரும் வளர்ந்தார்கள். நான் மட்டும் சுருங்கினேன், தலையைத் தவிர்த்து. இரத்தம் சுண்டி வெளிர் மஞ்சள் நிறத்தில் என்தோல் மாறிப்போனது. என் அப்பா என்னை மட்டும் சிவப்பாகப் பெற்றதாக அடிக்கடி பெருமை கொள்வார். வாரத்தில் இரண்டு நாளேனும் தொட்டிலுக்குள் தலைவிட்டுப் பார்ப்பார். ஓரிரு வார்த்தைகளில் கொஞ்சுவார். அந்த ஒரு சிறிய மகிழ்ச்சியை மட்டுமே அவருக்கு என்னால் அளிக்க முடிந்தது.
என் உடலில் பெண்மையை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தது என் கூந்தல் மட்டுமே. அதனையும் மூன்று மாதங்களுக்கொருமுறை கத்தரித்து எறியும் பொழுதெல்லாம் என் அம்மா அழுதுகொண்டு தான் அதனை செய்து முடிப்பாள்.
எத்தனையோ நாட்கள் எறும்புகளுக்கு இரையாகிருக்கிறேன், எந்த சலனங்களும் காட்டாமல். பள்ளி முடிந்து வீடு திரும்பும் என் அக்கா கதறித் துடித்து என் கண்களை மேயும் எறும்புகளைக் களைவாள். என் அண்ணன் கண்கள் பொங்கி எட்ட நின்று பார்த்துக் கொண்டிருப்பான்.
என்னைச் சுற்றி வீசும் மூத்திர நெடி என் குடும்பத்தின் ஒரு அங்கமாகிப் போனது.
ஒருவேளை என் பிறப்பை தள்ளிப்போட்டிருந்தால் எனக்குப் பதில் யாரோ பிறந்திருப்பார்கள். நான் தப்பித்திருப்பேன். பாருங்கள், என் பிறப்பை தள்ளிப்போடத் தெரியாத என் பெற்றோருக்கு என் இறப்பை இத்தனை காலம் தள்ளிப்போடத் தெரிந்திருக்கிறது.
என் அம்மா நான் இருந்தும் அழுதாள். செத்தும் அழுதாள். நான் மட்டும் எப்பொழுதும் போல் சலனமற்றே கிடக்கிறேன். என்னை நான்குபேர் தூக்கிச் செல்கிறார்கள். நான் வானம் பார்க்கிறேன். இத்தனை வருடங்களாகியும் அது நிறம் மாறவே இல்லை. என் இறந்தகாலத்தின் ஏதொ ஒரு மாலைப்பொழுதில் எவரும் அறியாமல் என்னையும் அறியாமல் நான் பூப்பெய்திருப்பேனா என்று நினைத்துப் பார்க்கிறேன். வாழ்க்கை அற்புதம். சிலருக்கு அது சொர்க்கம். சிலருக்கு அது நரகம்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக