ஊருக்குள்ள ஒதட்டழகி
உன்ன விட்டா ஆரிருக்கா?
உன் ஒதட்டோர மச்சத்துக்கு
வேறேதும் பேரிருக்கா?
வடிச்சு வச்ச செலையாட்டம்
வயலோரம் நிப்பவளே!
பிடிச்சு வச்ச பிள்ளையாரா
நா மயங்கி நிக்கிறேன்டி!
உச்சி வெயுலுதான்,
உன்னப் பாத்தப்புறம்
எட்டுத்தெச மேகமெல்லாம்
கிட்ட வந்து நிக்குதடி.
காத்து என்னச் சுத்துதடி.
கனகாம்பரமும் வீசுதடி.
நீச்சத்தண்ணி சொம்புக்குள்ள
இனிப்பக் கலந்தியா? இல்ல
உன் நெனப்பக் கலந்தியா?
தொண்டக்குழி நனையுமுன்ன
ஒடம்பெல்லாம் சிலுக்குதடி.
பூப்பூவா இட்டிலியும்
பூண்டு மணக்க சட்டினியும்
ஆவிபறக்க நீ தந்தா
அசராம எறங்குமடி.
நான் குடிச்சக் கஞ்சியில
கடசி பருக்க ஓஞ்சொத்தா?
மீசையில ஒட்டுனாலும்
ஆசையில கேக்குறியே!
உன் கெண்டக்காலு மஞ்சளெல்லாம்
ஊருக்கெல்லாம் சேதி சொல்ல
என் நாலுமொல வேட்டியில
நல்லாவே ஒட்டிக்கிச்சு.
எந்தக்காட்டு மழ வந்து
ஏங்கனவ கெடுத்துருச்சு?
எவன் வச்ச செய்வெனையோ?
நின்ன மரம் படுத்துருச்சு.
நெஞ்சக் கீறி உள்ளார
என்னத்த பொதச்சீயோ?
வளந்து மரமா நிக்குதடி.
இரணமா குத்துதடி.
சீமத்தொர கெடச்சாலும்
சீமானே வந்தாலும்
நீதான்டா என் உசுரு. நாந்தான்டா உன் கொசுறுன்னு
வசனமெல்லாம் பேசுனியே?
கனவெல்லாம் வீசுனியே?
எங்கேடி போனவ நீ?
எந்தச் சீமையில வாக்கப்பட்டுப்போனவ நீ?
கூடுவிட்டு கூடுபாயும்
வித்த ஒன்னக் கத்துட்டு
நீ விரும்பும் எவனுக்குள்ளயும்
புகுந்து வாழ நான் வாரேன்.

6 கருத்துகள்:
மிகவும் அருமை அருண்... முழுக்க முழுக்க மண் வாசனை வீசுகிறது... இதை போன்ற கிராம பாடல்களை(நாட்டு புற பாடல்கள்) பார்த்து கேட்டு எத்தனை நாளாச்சு!!! அதிலும் அந்த கடைசி நான்கு வரிகள் ஒவ்வொரு உண்மையான நேசிகள் மனதிலும் தோன்றும் எண்ணம் இது... //கூடுவிட்டு கூடுபாயும்
வித்த ஒன்னக் கத்துட்டு
நீ விரும்பும் எவனுக்குள்ளயும்
புகுந்து வாழ நான் வாரேன்.// வாழ்த்துக்கள்..
chance illa
super
@Ran Hasan: உங்களின் வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்துக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன் :)
@பாவா ஷரீப்: மிக்க நன்றி!
ஏய் இந்தா, ஏய் இந்தா, ஏய் இந்தாதாதாதா... பாடலே ஆட வைக்கிறது. ஒர் நல்ல கவிஞன் கிடைத்துவிட்டார். அருண் சரவணன் அருமை.
@Siraju: கருத்துரைக்கு நன்றி!
கருத்துரையிடுக