நவம்பர் 26, 2012

முதுமையும் தனிமையும்

காட்டில் இருக்கும் ஒரு மரத்தின் வயது ஐநூறைத்தாண்டி இருக்கும். அது இன்னும் பிரம்மாண்டமாக நிமிர்ந்து நின்று பறவைகள், விலங்குகள் என்று பாரபட்சம் பார்க்காமல் நிழல் தந்துகொண்டிருக்கிறது. காலங்கள் மாறி மாறி எத்தனை இயற்கை இன்னல்கள், இடையூறுகள் வந்த வண்ணம் இருப்பினும் சற்றும் அசைந்து கொடுக்காமல் வேர்பிடித்து தலைத்து ஓங்கி உயர்ந்து நிற்கின்றது. அதன் முதுமையோ அதன் தனிமையோ அதனை எந்த விதத்திலும் பாதித்ததாகத் தெரியவில்லை. இயற்கையின் திருவிளையாடல்களில் விநோதமே மனிதன் தான். ஒரு மரத்தின் தனிமை, முதுமை அதனை வலுப்படுத்தும் அதே வேளையில் ஒரு மனிதனின் முதுமையும் தனிமையும் அவனை எந்த அளவிற்கு வாட்டி வதைக்கிறது என்பதை அனுபவித்தும் அருகில் இருந்தும் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.


கூட்டுக்குடும்பங்கள் குறைந்து பிழைப்பு தேடி பெரும்பான்மையான இளைஞர் கூட்டம் பரதேசம் போகும் இந்த காலகட்டத்தில் அறுபது எழுபதுகளைக் கடந்து வாழ்வின் மீதி நாட்களை தனிமையில் எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் நம் பெற்றோரின், தாத்தா பாட்டியரின் அன்றாட முதுமை வாழ்க்கை எத்தனை கொடுமையானது என்பதனை தொலைவில் இருந்தாலும் மெல்ல மெல்ல உணர்ந்துகொண்டிருக்கும் தருவாயில் நம் இயலாமையின் வெளிப்பாடாகத் தோன்றிய வரிகளே(வலிகள்) இவை:

எழுப‌து முடிஞ்சு
எத்தன வருசமோ?
கணக்கு தெரியல - ‍‍இன்னும்
உசுரு பிரியல.

எந்திரிச்சு நின்னா
எளைக்குது.
நடந்தா ஒடம்பெல்லாம்
நடுங்குது.
கால மால தெரியல‌
கால் வீக்கம் கொறையல.
மூட்டு தேஞ்சுது
மூளை சுருங்குது.
பொலம்பாம இருக்க மட்டும்
மாத்தர மருந்தில்ல.

மகனுங்க பேரு
மனசுல இருக்கு.
பேரன் பேத்திங்க‌
மொகம் மறந்துபோச்சு.

அடுத்த தெரு
ஆண்டயன் செத்து
ரெண்டு வருசமாச்சாம்.
எம்பேத்தி சொன்னா.
இப்பத்தேன் தெரியும்.

தேதி கெழம தெரியல.
கடியாரம் ஓடல.
பல வருசமா போடாம‌
பழைய பேப்பரு இன்னும்
பரண்லயே கெடக்கு.

பென்சனும் பேப்பரும்
பெருசா தெரியுது.
தேர்தலும் திருவிழாவும்
சிறுசா தெரியுது.
தீபாவளி பொங்கல் கூட‌
வீடு நெறஞ்சா தான் தெரியுது.

பாத்ரூம் போகும்முன்ன‌
படுக்கையெலாம் நனையுது.
பச்ச கொழந்தபோல‌
பழையகாலம் திரும்புது.

எந்திரிச்சு நடக்கவா
இப்படியே கெடக்கவா?
தலயன‌ நஞ்சுபோச்சு
தண்டுவடம் வளஞ்சுபோச்சு.

விட்டத்த எத்தனமொற‌
விடாம பாத்திருக்க?
காணாத சொந்தம்தேடி
கண்ணுரெண்டும் பூத்திருக்க.

செல்போனு அலறயில‌
மெட்ராசோ? மணப்பாறையோ?
எந்தமவன் அழைக்கிறான்னு
ஏமாந்த நாள் நெறையா.

வந்து ஒக்காருமுன்ன‌
வர்ற‌ மருமக்கல்லாம்
பேர புள்ளைகளோட
பேசாம போவாக.
இருந்துட்டு போலாமுன்னு
எத்தனமொற சொன்னாலும்
காபி ஆறுமுன்ன‌
காணாம போவாக.

விசாரிக்க வாரதுபோல்
கூசாம காசுகேப்பான்.
ஒப்பாரி வைக்காம‌
ஒண்ணாந்தேதி போமாட்டான்
நான் பெத்த கடசிமகன்,
சிரவணன்னு பேருவச்சேன்.

தூக்கவோ பாக்கவோ
இருக்கயில‌ ஆளில்ல.
இருக்கவோ போகவோனு
யாருட்டயும் கேக்கல.
இப்போதைக்கு இல்லனு
எமன்கிட்ட சொல்லல‌.

பெத்த கடன் தீர்க்கும் வர‌
நின்னுநிமிந்து நடக்கும் வர‌
இம்மையிலும் மறுமையிலும்
உசுர் வாழ்ந்தா போதுமுங்க.

பூமிக்கு பாரமா
படுக்கயில விழுந்தாக்க‌
ஒறங்கும்போது பேசாம‌
பரலோகம் போயிடனும்.

ஜூலை 11, 2012

கனவில் வரும் காதல்

["சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையில்..." என்ற பாடலின் மெட்டில் ஒரு புதிய பாடல் எழுதும் என் சிறியதோர் முயற்சி]
























இரவில் வரும் கனவில் வரும்
எதிரில் எழில் உருவம்,
என்னுயிரில்
அது வரையும் பின் மறையும்,
இனிதில் இது இனிது, இனி
எளிதில் என்னெதிரில் வருமோ?

காதல் அது மலரும்
கவிகள் பல எழுதும்
கரைந்தே பல நொடிகள் சில
உறைந்தே உருகும்.

மதியில் சில மனதில் சில‌
மயக்கம் தரும் மதுபோல்
வீழ்ந்தே இது
மடியும் பருவம்.

கடலில் வரும் புயல்போல் அதன்
கரையில் வரும் அலைபோல்
எனை தொடர்ந்தே தொடரும்.

பதிலில் அவள் பதிலில்
மௌனம் அது சலனம்
என் மனதில் அது பதியும்
ஒரு பதியம்
அது படர்ந்தே தினம் வளரும்.

ஒரு நிலையில்
என் நினைவில் அவள்
வ‌ழியில் வரும் வ‌ழியில்
மணலில் எழும் மணமும்
பொழியும் சிறு மழையும்.
அவள் பாதம் படும் தடங்கள்
அதில் மலர்கள் அவை மலரும்.
அவள் இதழில் அதன் இடையில்
மின்னும் ஒரு ஒளிபோல்
பெய்யும் துளி பனியும்
அதில் உய்யும் என்னுலகும்
அது மாய்ந்தே போகும்.

அவள் விழியில் அதன் ஒளியில்
ஒரு தயக்கம் எழும் என்னில்,
எனை இயக்கும் அது மயக்கும்.
வெட்கம் அது இறக்கும்
மோகம் அது பிறக்கும்
இரவை அது குடிக்கும்
விடியும் வரை தகிக்கும்.

உதிரும் ஒரு முத்தம்
அதில் சிதறும் சில முத்தும்
சிகையில் வரும் வாசம்
அது நுகரும் சொர்க்கம்.
மஞ்சம் அது நனையும்
தஞ்சம் புகும் தனலில்
உடலில் சில நொடியில்
புதிதாய் ஒரு பிரளயம் நிகழும்.

விடியும் அப்பொழுதில்
கனவும் அது களையும்.
உடைகள் அவை மறந்தே
சில அடிகள் அவள் நடந்தே
வான்வில்லாய் மெல்ல‌ மறைந்தாள்.
மீண்டும் அவள் வருவாளென‌
மீண்டே எழுவேன் அனுதினமும்.
எழுந்தும் நான்
எழுதும் இக்கவியும்
இவ்வரியில் முடிவடையும்,
அது தொடர்ந்தே தொடரும்.

ஜூன் 12, 2012

ஒரு பிரிவு

குடும்ப உறவுகள், நண்பர்கள், சுற்றத்தார் என இந்த சமூகத்தில் நம்மைச்சுற்றி இருப்பவர்களால், நம் வாழ்வில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் நாம் எடுக்கும் முடிவுகளே நம் வாழ்வின் போக்கை தீர்மானிக்கின்றன. நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கோ நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம். இன்றைய இந்தியாவின் பொருளாதாரச் சூழலில் ஒரு தனி நபர் தன் குடும்பத்தை காப்பாற்றவும் ஒரு சமூக அந்தஸ்தை அடையவும் வேண்டி பணம் பொருள் ஈட்ட பெருநகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று பல வருடங்கள் குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழ்ந்து சம்பாதித்து வருகின்றனர். சிலர் குடும்பத்தை பிரிய மனமில்லாமல் கிடைத்த வேலை, கிடைத்த வருமானத்தை வைத்துக்கொண்டு திருப்தியுடனோ அதிருப்தியுடனோ வாழ்கின்றனர். ஏதோ ஒரு வகையில் நாம் வாழ்வில் திருப்தியடைய, நிம்மதியடைய நிறையவே இழக்க வேண்டியிருக்கிறது. இது போன்றே நம் வாழ்க்கையின் நிலை நாம் வாழும் காலத்துக்கும் நீடித்தால், வயது முதிர்ந்த காலத்தில் நம்மை பெற்றவர்களை காப்பாற்றவோ ஆதரிக்கவோ அவர்களை நம்முடன் அரவணைத்துக்கொள்ளவோ மறந்து விடுகின்றோம். அப்படியே அவர்களை ஆதரித்து கூடவே வைத்துக்கொள்ள‌ மனமிருந்தாலும் மனைவி, குழந்தைகள் என்ற தனிக்குடும்ப வட்டம் நம்மை தீர்க்கமான முடிவுகள் எடுப்பதிலிருந்து குழப்பிவிடுகிறது.

நமக்கு மனைவியாக வருபவள் அழகாகவும் அன்பானவளாகவும் பெரியவர்களை மதிக்கத்தெரிந்தவளாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். நமக்கு கணவனாக வருபவர் நல்ல சமூக அந்தஸ்துடையவராகவும், பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்று பெண்கள் விரும்புகிறார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. மனிதர்கள் அவரவர் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாக இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் குடும்பம் என்பது ஆயிரம் முரண்கள் இருப்பினும் சகித்துக்கொண்டு வாழப்பழகிக்கொள்வதே ஆகும். பிரச்சனை இங்குதான் தொடங்குகிறது. "நீ எனக்கு முக்கியத்துவம் தருவதில்லை. உன் பெற்றோரைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்கிறாய். எனக்கு என் குடும்ப முன்னேற்றம் முக்கியம். எனக்கு என் குழந்தையின் படிப்பு முக்கியம். என்னால் உன் பெற்றோரை பார்க்க இயலாது. நான் உன்னை திருமணம் செய்து கொண்டதால் இழந்தது தான் அதிகம். " இவ்வாறு சிறு சிறு நிகழ்வுகளில் தொடங்கும் பிரச்சனைகள் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் பூதாகாரமாக வெடிக்கும். அப்படிப்பட்ட தருணங்களில் இருதரப்பினருமே எதிர்கொள்ளும் சங்கடங்கள், மனக்கசப்புகள் ஏராளம். இதில் முக்கியமான ஒன்றை நாம் மறந்துவிட்டோம். கணவன் மனைவி சண்டை சச்சரவுகளில் பெரிதும் பாதிக்கப்படும் குழந்தைகளின் மன‌நிலையை எவருமே கண்டுகொள்வதில்லை. சமீபத்தில் ஒரு காணொளியைப் பார்த்தேன். அதில் பிரபல நடிகர் ஒருவர் தன் பேரனுடன் விமான நிலையத்தைவிட்டு வெளியே வருகிறார். அப்பொழுது அங்கு வந்த அந்த சிறுவனுடைய தாய், அதாவது அந்த நடிகரின் மகள் (அவரும் ஒரு நடிகையாக இருந்தவர்), தன் மகனை தன்னிடம் ஒப்படைக்குமாறு தந்தையுடன் வாதத்தில் ஈடுபடுகிறார். சுற்றிலும் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். இங்கு பிரச்சனை என்னவென்றால் அந்த நடிகை தன் முதல் கணவருடனான மண வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து பெற்று மறுமணம் செய்து கொள்கிறார். முதல் கணவருடன் பிறந்த மகனை தன்னுடன் வாழ நிர்ப்பந்திக்கிறார். இந்த பிரச்சனை சம்பந்தப்பட்ட சில வழக்குகள் கூட‌ நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் விமான நிலையத்தில் நடைபெறும் சம்பவத்தில் அச்சிறுவனின் ஒரு கையை அவனுடைய தாத்தா ஒருபுறம் இழுக்கிறார். மறுபுறம் ஒரு கையை அவனுடைய தாயும் அவருடைய இரண்டாவது கணவரும் இழுத்துக்கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனை பத்திரிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படம்பிடித்துக்கொண்டிருக்கின்றனர். அந்தக் காணொளியை மிகுந்த சிரமத்துடனே பார்த்து முடித்தேன். அந்த சிறுவன் அனுபவிக்கும் அவஸ்தையை பார்த்து என் அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில மணித்துளிகள் மனம் முழுக்க‌ மிகுந்த கணத்துடனே அமர்ந்திருந்தேன்.

மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக சுய இலாபத்திற்காக நெருங்கிய குடும்ப உறவுகளிடம் கூட நம்மை பெற்றவர்களிடம் கூட, நாம் பெற்ற பிள்ளைகளிடம் கூட இவ்வளவு மோசமாக நடந்துகொள்ள முடியுமா? என்பதற்கு மேற்சொன்ன சம்பவம் ஒரு சிறிய எடுத்துக்காட்டு. நம்மால் அந்த இடத்தில் அந்த சிறுவனின் இடத்தில் இருந்து கொண்டு என்ன செய்துவிடமுடியும். கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். நாம் வாழ்வில் எத்தனை முடிவுகளை எடுக்கிறோம். இப்படி ஒரு சூழல் நம் வாழ்வில் வந்தால் நாம் எப்படிப்பட்ட வலியை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்று நினைக்கவே கோபமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. ஒரு சில மணித்துளிகளுக்குள் நடந்த அந்த சம்பவத்தை காணும்போதே நாம் எந்த முடிவும் எடுக்க‌ இயலாத ஒரு இக்கட்டான சூழலுக்குள் சிக்கிக்கொள்கிறோம். நம்மை விடவும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் நாடுகளில், ஈரான் போன்ற மதக்கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் நிறைந்த நாட்டில் வசிக்கும் ஒரு மேல்தட்டு நடுத்தர‌ வர்க்கத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்குள் நடக்கும் பிரச்சனைகளையும் பிரிவையும் துள்ளியமாகவும் விறுவிறுப்புடனும் மிகுந்த வலியுடனும் நம் முன் பிரதிபலிக்கும் ஒரு படமே A Separation (ஒரு பிரிவு).



திருமணமாகி 14 வருடங்கள் கழித்து வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது குடும்பத்தை முன்னேற்றி விட முடியாதா என கணவனிடம் போராடும் மனைவியாக சிமின். அல்ஜெமிர் என்ற மறதி நோயால் அவதி‍ப்படும் தன் தந்தையை பார்த்துக்கொள்ள இந்த நாட்டிலே தான் நாம் இருந்தாக வேண்டுமென்று மனைவியை நிர்ப்பந்திக்கும் கணவனாக நாதெர். இருவருக்கும் இடையில் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கும் 11 வயது மகளாக ர‌சியா. இவர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டமும், தம்பதியரின் பிரிவால் நடக்கும் பின் விளைவுகளுமே நம்மை திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தாண்டியும் இழுத்துச் செல்கிறது.

நாதெர் தன் தந்தை மீது அவர் வைத்துள்ள பாசம் நம் கண்களில் நீரை வரவழைக்கத் தவறுவதில்லை. மனைவி பிரிந்து சென்ற‌பின் ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்புகையில் தன் தந்தை கழிப்பறையில் விழுந்து கிடக்கிறார் தூக்க ஆளில்லாமல். தன் மகளுடன் வீட்டுக்குள் நுழையும் நாதெர், தந்தையை தேடுகிறார். கழிப்பறையின் கதவு அருகில் உள்புறம் இருக்கும் தந்தையை அழைக்கிறார். மீண்டும் மீண்டும் கதவைத்தட்டி தந்தையை அழைக்கிறார். "அப்பா விலகிக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் நான் கதவை திறக்க முடியும், இப்பொழுது நான் கதவைத்திறந்தால் உங்களுக்கு அடிபட்டு விடும், தயவு செய்து விலகிக்கொள்ளுங்கள்" என்று கத்துகிறார், அன்பாகவும் சொல்லிப் பார்க்கிறார். தந்தைக்கு எதுவுமே புரியவில்லை. வேறு வலியில்லாமல், கதவைத்தள்ளி உள்ளே செல்கிறார். மகள் ரசியா வெளியே அழுகையை அடக்க முடியாமல் நிற்கிறாள். தன் தந்தையை தூக்கி சக்கர நாற்காலியில் அமரவைத்து அவர்மேல் இருக்கும் அழுக்கை துடைத்து குளிப்பாடுகிறார் நாதெர். அவரால் அடக்கமுடியாத அழுகை கண்களில் நீராய் பொங்கி நிற்கிறது. தந்தையில் மடியில் தலைசாய்த்து கதறி அழுகிறார். நம் இயலாமை நம் பாசத்திற்குரியவர்களை பார்த்துக்கொள்ள இயலாமல் போகும் தருணம் அடக்க‌ முடியாத வேதனையும் வலியும் அழுகையாய் பீறிட்டு வருகிறது. நாம் ஒன்றை இழந்தும் எதையுமே சாதிக்க முடியாமலும் போகும் பொழுது நம் உணர்வுகள் நம்மை ஆட்கொண்டுவிடுகின்றன. அது அவசர முடிவுகளை எடுக்க வைத்து நம்மை மேலும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகின்றது.



இந்த சம்பவத்துக்குப்பின் ஒரு கீழ்த்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை தன் தந்தையை பார்த்துக்கொள்ள வேலைக்கு அமர்த்துகிறார் நாதெர். அப்பெண் தன் சிறுவயது மகளுடன் வந்து வீட்டையும் நாதெரின் தந்தையையும் கவனித்துக்கொள்கிறார். வாழ்வில் தோற்று வேலையில்லாமல் இருக்கும் அப்பெண்ணின் கணவர், அப்பெண் கர்ப்பமாக இருப்பது, என பலதரப்பட்ட காரணங்களால் பின்னப்பட்ட சூழல்களுடன் கதை நகர்கிறது.



முழு படத்தையும் இங்கு சொல்வது சரியாகாது.
  • திருமணமான ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது.
  • சூழ்நிலையை காரணம் காட்டி பெற்றவர்களை பிரிந்து வாழும் ஒவ்வொரு பிள்ளையும் பார்க்க வேண்டிய படம் இது.
  • வாழ்க்கையின் விளிம்பில் அடிபட்டு நொந்துபோய் இழக்க ஒன்றுமே இல்லாமல் கீழ்தட்டு வர்க்கத்தில் விரக்தியில் வெறுப்புடனே இச்சமூகத்தை மேல்தட்டு வர்க்கம் என்றாலே கெட்டவர்கள் என்ற நோக்கில் அணுகும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது.
  • எதார்த்த சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது.
  • குறிப்பாக சமீபத்தில் தமிழில் வெளிவந்த வழக்கு எண் 18/9 படத்தில் வரும் ஏழை நல்லவன், பணக்காரன் கெட்டவன் என்ற பிற்போக்கு எண்ணத்துடன் இருப்பவர்கள் பார்க்க வேண்டிய படம் இது.



ந‌ம் உணர்வுகளின் வெளிப்பாடும் அதன் விளைவுகளும் நம் வாழ்க்கையினையோ நம்மை சுற்றி வாழ்பவர்களின் வாழ்வினையோ புரட்டிப்போடலாம். நாம் எடுக்கும் முடிவுகள் சரியா தவறா, நம்மையோ நம்மைச் சார்ந்தவர்களையோ பாதிக்குமா பாதிக்காதா என்று பொறுமையாக ஆராய்ந்தும், சில பல காரணங்களால் நம் வாழ்வில் மிகுந்த வலியோ வேதனையோ ஏற்படும் தருணங்களில் அதனை எதிர்கொள்ளும் வலுவான மனநிலையுடன் எதனையும் எதிர்கொள்ள வேண்டுமென்பது போன்ற பல்வேறு கருத்துக்களை இப்படம் நமக்கு ஆழமான உணர்த்துகிறது.



படத்தின் இறுதிக்காட்சி நம்மை நோக்கி ஒரு மாபெரும் கேள்வியை எழுப்புகிறது. முடிவெடுக்க வேண்டிய இடத்தில் நம்மை நிறுத்திவிட்டு படம் அமைதியாக நிறைவடைகிறது, நம் அமைதியை நிலைகுலையச் செய்துவிட்டு.

ஜூன் 08, 2012

எந்திர மனிதர்கள்

மழை நமக்கு மிகவும் பிடித்த ஒன்றாக கருதுகிறோம். மழையை வர்ணித்து கவிதைகள் வடிக்கிறோம். மழை வராதா என கோடையில் தவிக்கிறோம். ஆனால் மழை வந்தபின் நனைகிறோமா என்றால் பெரும்பாலான பதில் இல்லை என்பதே. மழை அடித்துப்பெய்து ஓய்ந்த ஒரு மாலைப்பொழுதில் அலுவலகம் முடிந்து பேருந்தில் வீடு திரும்புகிறோம். பேருந்தில் அங்கும் இங்கும் இருக்கைகளில் ஈரமாக இருக்கின்றது. பயணிகள் யாரும் அந்த இருக்கைகளில் அமர தயங்குகின்றனர் நம்மையும் சேர்த்தே. நம் வீடு இருக்கும் சாலையெங்கும் மழை நீர் தேங்கியும் ஓடிக்கொண்டும் இருக்கிறது. ஆடையை கைகளில் பிடித்து தூக்கிக்கொண்டு மழை நீர் படாதவாறு கவனமாக தாவித்தாவி நடந்தே வீட்டை அடைகின்றோம். இதுதான் நமக்கும் இயற்கைக்குமான தொடர்பாக இன்று இருக்கிறது. இதுதான் நாம் இயற்கையின் மீது கொண்டுள்ள‌ பற்றுதல், பாசம் எல்லாம்.



இன்று நாம் எதில் ஆர்வம் கொண்டுள்ளோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கிரிக்கெட், சினிமா, இவற்றை விட்டால் நமக்கு செய்வதற்கோ பொழுதை கழிப்பதற்கோ ஒன்றுமே தேவையில்லை. ஊருடன் கூடி வாழ், தனிமரம் தோப்பாகாது என்பார்கள். ஆட்டுமந்தை, பன்றிக்கூட்டத்திற்கும் கூட இது பொருந்தும். உலகமே பெரும்பாலும் இப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. நாம் வாழும் காலகட்டம் நம்மை இயற்கையை விட்டு எவ்வளவு தூரம் இழுத்துச் சென்றிருக்கிறது என்பதனை உணராமலே வாழப்பழகிவிட்டோம். வணிக விளம்பரங்களின் பின்னால் பொருளுக்கு அலையும் ஆட்டு மந்தைகளானோம். எது இன்றைக்கு வணிகமயமாகவில்லை? காற்றும் நீரும் கூட காசு கொடுத்து வாங்கும் சமூக அவலத்தையும் சகித்து வாழ பழகிக்கொண்டோம். சமூகக்கட்டமைப்பின் சாரம் நம்மை எத்தனை நையப்புடைத்தாலும் அதனை விட்டு வெளியில் வரும் எண்ணமோ தைரியமோ நம்மில பலருக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை.

நாம் எத்தனை காலம் தான் இக்கட்டான சூழல்களிலும் நமக்குப் பிடிக்காத ஒரு வாழ்க்கையினையும் வாழ்ந்து கொண்டிருப்பது? வாழ்வதென்றால் படித்து பட்டம் பெற்று பணம் சம்பாதித்து மணம் முடித்து பிள்ளைகள் பெற்று வயதான பின் பேரக்குழந்தைகள் பார்த்துவிட்டு செத்துப்போவதா? வேறு ஒன்றுமே இல்லையா? இன்றைய நிலையில் நம்மில் எத்தனை பேருக்கு நீச்சல் தெரியும்? மரம் ஏறத் தெரியும்? ஆனால் பேஸ்புக் தெரியும். கிரிக்கெட் தெரியும். பீஸா பர்கர் தெரியும். எது நம்மில் நிஜம்? எது நம்மில் பொய்? ஏன் இந்த மாற்றங்கள்? இவை தான் நம்மை உண்மையிலேயே மகிழ்விக்கும் விடயங்களா? மின்விளக்குகளை இன்றளவில் கூட பார்த்திராத மனிதர்கள் உலகில் வாழ்கிறார்கள். ஏன்? இந்தியாவிலும் கூட வடகிழக்கில் மின்சாரம் இல்லாத கிராமங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் நம்மைவிட மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அவர்களின் மொத்த வாழ்க்கையினையும் நான்கு நாள் கோடை விடுமுறையில் அனுபவிக்க ஒவ்வொரு வருடமும் பணம் சேர்த்து அலுவலகத்தில் விடுப்பு வேண்டி நாம் எத்தனை சிரமப்பட்டு திட்டமிடுகிறோம்? அதனை வாழ்க்கை முழுவதும் அனுபவிக்கும் எண்ணம் நமக்கு ஏன் தோன்றுவதே இல்லை? நாம் வியத்தகு விஞ்ஞான தொழில் நுட்பங்களால் முன்னேறி விட்டதாக பெருமை கொள்கிறோம். சகல வசதி வாய்ப்புகளையும் அனுபவிப்பதாக நினைக்கிறோம். ஒரு நாள் மின்சாரம் இல்லாவிட்டால் எத்தனை அவதியுறுகிறோம்? ஒரு நாள் பெட்ரோல் இல்லையென்றால் நாயாக பங்க் தேடி அலைகிறோம். இது தான் நம் விஞ்ஞானம், இது தான் நம் தொழில் நுட்பம். ஒருமுறை என் பள்ளியாசிரியர் நம் மக்களின் வாழ்க்கை மாற்றத்தை மிக எளிய எடுத்துக்காட்டுடன் கூறினார். ஒரு காலத்தில் வீட்டில் ஞாயிற்றுக்கிழ‌மைகளில் மட்டுமே காலை உணவாக இருந்த இட்லி இன்று தினமும் உண்ணும் உணவாக மாறியிருக்கிறது. அக்காலத்தில் இட்லிக்கு மாவாட்டுவதற்கு உரலையும் ஆட்டுக்கல்லையும் பயன்படுத்தினார்கள். உரல் தரையில் இருக்க ஆட்டுக்கல்லை நாம் சுற்றினோம். கை வலித்தது. விஞ்ஞானம் வளர்ந்தது. ஆட்டுக்கல் தொங்க விடப்பட்டு உரல் சுற்றியது. மாவை அள்ளி பாத்திரத்தில் கொட்டினோம். அப்போதும் கை வலித்தது. விஞ்ஞானம் வளர்ந்தது. உரல் சுழன்று கவிழ்ந்து பாத்திரத்தில் தானாக மாவு விழுந்தது. இன்று மாவாட்டுவதே பெரிய வேலையாக இருப்பதால் பாக்கெட்டில் வைத்து ரெடிமேடாக விற்கிறார்கள். நாளை ரெடிமேடாக இட்லியை பாக்கெட் செய்து விற்பார்கள். ஏறகனவே சப்பாத்தி இடியாப்பத்தை இப்படி விற்க ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் விஞ்ஞானம். இதுதான் முன்னேற்றம். இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது. நாம் விஞ்ஞானத்தின் தொழில் நுட்பத்தின் கண்டுபிடிப்புகளினால் சோம்பேறியாகிக்கொண்டிருக்கிறோம்.



"அவன் ஒரு கிராமத்தான்", "அவன் ஒரு பட்டிக்காட்டான்" என்று இந்த சமூகம் ஒருவனை பார்த்து ஏளனம் செய்ய இவ்வாக்கியங்களை பயன்படுத்துகிறது. உண்மையில் அது "இவன் ஒரு நகரத்தான்", "இவன் ஒரு பட்டண‌த்தான்" என்றல்லவா கேலி செய்ய வேண்டும். நம் கிராம மக்கள் அனுபவிக்கும் சுகபோக வாழ்வில் கால் பங்காவது நாம் அனுபவிக்கும் வரம் பெற்றிருக்கிறோமா என்றால் இல்லை. நமக்கு பணம் முக்கியம். அதனை சம்பாதிக்க பட்டணம் செல்ல வேண்டும். பட்டணத்திலேயே செட்டில் ஆக வேண்டும். நம் பெற்றோர், உறவுகள், பால்ய நண்பர்கள், சுற்றத்தார், நாம் வாழ்ந்த வீடு, விளையாடிய திடல்கள், தோட்டங்கள், பசும்பால், பனை மரங்கள், கிணறுகள், பம்பு செட்டுகள், குளம், குட்டை எதுவுமே தேவையில்லை. நம்க்கு தேவை எல்லாம் பணம் பொருள் மட்டுமே. அதுதான் வாழ்க்கை, அது தான் இந்த சமூகத்தில் கௌரவம். அது இருந்தால் போதும். மகிழ்ச்சி தானாய் வந்துவிடும். எந்த பிரச்ச‌னையும் வாழ்க்கையில் வராது. இப்படியெல்லாம் மனக்கணக்கு போட்டே நாம் பிணவாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் வாழ்வதற்கான உந்து சக்தி இந்த எந்திரத்தனமான பிற்போக்கு நகர வாழ்வில் நிச்சயமாக இல்லை. வாழ்வின் சாரம் கிராமங்களில் இருக்கிறது. இயற்கையுடன் நெருக்கமாக வாழும் மனிதர்களிடம் இருக்கிறது. காடு மலை கடல் கடந்து மனிதன் அலைந்து திரிந்ததெல்லாம் வேறு மனித நாகரிகம் இருக்கிறதா என்று பார்க்க இல்லை. நாம் வாழ‌ இந்த பூமியில் சிறந்த இடம் எங்கு உள்ளது என்று தெரிந்து கொள்ளத்தானே.

வாழ்வதற்கான உந்துதல் புதிய அனுபவங்களில் கிடைக்கிறது. ஒரு மாற்றாக சிறிது காலம் உங்கள் எந்திர வாழ்க்கையை மறந்துவிட்டு எங்காவது பயணித்துப்பாருங்கள். மாதச்சம்பளம், வார விடுமுறை, ஓவர் டைம், அப்ரெய்சல், ப்ரொமோசன், ஆன்சைட், டூ பெட்ரூம் ஃப்ளாட், ஏசி, ஸ்மார்ட்ஃபோன், கிரிக்கெட், சூப்பர் சிங்கர், பீஸா, ஃப்ரைட் ரைஸ், கேர்ள் ஃப்ரண்ட் என‌ எல்லாவற்றையும் மறந்து துறந்து ஒரு பையில் இரண்டு துணிமணிகளுடன் பயணத்திற்காக சிறிது பணமும் எடுத்துக்கொண்டு கிளம்புங்கள். உலகம் பரந்து விரிந்து திறந்து கிடக்கிறது, நாம் அனுபவிக்க. கடல் அதிசயம், காடு அதிசயம், மலை அதிசயம், மனிதர்களும் கூட‌ அதிசயம் தான். நம் முன்னோர்கள் வாழ்ந்து விட்டுப்போன சுவடுகளாய் பல ஆயிரம் கோயிலகள், பிரம்மாண்டமான அரண்மனைகள் இன்றும் அவர்கள் பெயர் சொல்லும்படி கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுமே இல்லை என்பவன் பிறவிக்குருடன். காலங்காலமாய் வாழ்ந்து மறைந்த பல நாகரிகங்களின் வரலாறு அவற்றில் புதைந்து கிடக்கிறது. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையினயும் நாம் வாழும் இன்றைய வாழ்க்கையினையும் கொஞ்சம் ஒப்பிட்டால் கூட நாம் அற்பமாகவே தெரிவோம். இன்றும் கிராமங்களில் மனிதர்கள் எவ்வளவு நெருக்கமாக வாழ்கின்றார்கள் என்று ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து அறிந்துவிட்டு வாருங்கள். நாம் வாழும் ஃப்ளாட்டுகளில் மனிதர்கள் வாழ்வதில்லை. ஒரு அலமாரியில் வைத்து எடுக்கப்படும் பொருட்களைப்போல மனிதர்கள் தங்கிச் செல்கிறார்கள். அவ்வளவே. நம் நகர வாழ்க்கையில் ஒரு உயிரின் பிறப்போ இறப்போ இரண்டு மணி நேர ஆரவாரத்தில் இயல்பு என்று கூறும் எந்திர வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறது.

இழக்க ஒன்றும் இல்லாதிருப்பதே சுதந்திரம், நிம்மதி எல்லாம். மடியில் கணமிருந்தால் மனதிலும் இருக்கத்தானே செய்யும். ஒரு வாரம் உலகிற்கும் உங்களுக்குமான தொடர்பை துண்டித்து விட்டு எந்த கட்டுக்குள்ளும் அடங்காமல் ஓடும் பெரு நதியைப்போல பயணித்துப்பாருங்கள். தொலைதூர கிராமங்களில் வாழும் பல தரப்பட்ட மனிதர்களை சந்தித்துப்பாருங்கள். கட்டுப்பாடுகளற்ற நிர்ப்பந்தங்களற்ற பரிபூரண சூழ்நிலையே வாழ்வின் அற்புதமான கணமாகும். அப்படிப்பட்ட நிலையை வாழ்நாளில் அடைய விரும்பிய ஒரு மனிதன் தான் கிறிஸ்டோஃபர் மெக்கேண்டில்ஸ். இளங்கலைப்பட்டம் முடித்த கையோடு தான் வைத்திருந்த இருபத்தைந்தாயிரம் டாலர்களை ஒரு சேவை மையத்திற்கு அனுப்பிவிட்டு கையிலிருந்த மிச்ச பணத்தையும் எரித்து விட்டு தான் பயன்படுத்திய காரை ஒரு நெடுஞ்சாலையோரத்தில் விட்டுவிட்டு அலாஸ்கா காடுகளின் பெருவெளிகளை நோக்கி ஒரு சாகச பயணத்திற்கு தயாராகிறான். அவன் நாம் எதிர்கொள்ளும் எதார்த்தத்திற்கு முற்றிலும் மாறுபட்ட அப்பாற்பட்ட எண்ணங்களுடன் வாழ முற்பட்ட ஒரு இளைஞன். அவனுடைய தேடல் அற்புதமானது. மனித சமூகத்தின் குப்பைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஒரு தூய அப்பழுக்கற்ற உலகை நோக்கி அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சாகசங்களும் சங்கடங்களும் நிகழ்ந்ததாகவே இருந்த‌து. அவன் விரும்பிய எளிய வாழ்வை அடைய ஆன முயற்சிகளை செய்தான். சிக்கலான சமூக கட்டமைப்பை அவன் சிற்றளவும் விரும்பவில்லை. நம் கல்விமுறை, கல்வியே கூட தேவையற்ற ஒன்றாகவே கருதினான். "கல்வி, வேலைவாய்ப்பு என்பதெல்லாம் இருபத்தியோராம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பு, அது எனக்குத் தேவையில்லை." என்று காலத்திற்கு அப்பாற்பட்டு சிந்தித்தான். அவன் பார்வை விசாலாமானதாகவும் விரும்பியதை மட்டுமே செய்யும்படியான‌ எண்ணங்களையுமே பிரதிபலித்தது. தான் மீண்டும் பிறந்ததாக உணர்கிறான். தனக்கான விடியல் அப்பொழுதுதான் உதயமாகி உண்மையான வாழ்க்கையை தான் வாழ ஆரம்பித்திருப்பதாக மகிழ்கிறான். சமூக கட்டுக்குள் இருக்கும் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு புதிதாகப் பிறந்ததாய் உணர்கிறான். காட்டில் கிடைக்கும் விஷத்தன்மையற்ற தாவரங்களைப்பற்றிய ஒரு புத்தகத்தை தன்னுடன் வைத்துக்கொள்கிறான். தான் வழியில் சந்தித்த மனிதர்களை நினைவு கூறுகிறான். தான் விரும்பியபடியே வாழ்ந்த அந்த குறுகிய நாட்களில் எவரும் அனுபவித்திராத அனுபவங்களையும் புத்துணர்வையும் பெற்றாலும் தனிமை அவனுக்கு கடைசியில் ஒரு பாடத்தை கற்பிக்கிறது. மகிழ்ச்சி என்பது பகிர்ந்துகொள்ளும் பொழுது மட்டுமே முழுமை பெறுகிறது என்பது தான் அது. தவறான ஒரு தாவரத்தை உட்கொண்டு தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கும் நிலைக்கு உடல்நிலை சென்றுவிடுகிறது. சில வாரங்கள் கழித்து ஒரு மான் வேட்டைக்காரரால் அவனுடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. உயிருடன் எடுக்கப்பட்ட அவனுடைய கடைசி புகைப்படம் கீழே. அதில் தெரியும் அந்தப் புன்னகை உணர்த்துவது வாழ்க்கை நமக்காக படைக்கப்பட்டது. அதனை விரும்பிய முறையில் வாழ பழகிக்கொள்ளுங்கள். போலியான உலக வாழ்க்கைக்கு உங்களை தாரைவார்த்து கொடுத்துவிட்டு பிரச்சனைகள் வந்தபின் புலம்பிக்கொண்டோ சகித்துக்கொண்டோ வாழ்வது ந‌ரகமேயன்றி வேறொன்றுமில்லை.



இன்னது தான் சமூகம், இது படித்து இந்த வேலைக்குத்தான் போக வேண்டும். இந்த வர்க்கத்தை சேர்ந்த பெண்ணை தான் மணம் முடிக்க வேண்டும். இந்த பள்ளியில் தான் குழந்தையை படிக்க வைக்க வேண்டும். இந்த மாதிரி தான் வீடு கட்டி கார் வாங்கி வாழ வேண்டும். இது தான் கௌரவம். இது தான் வாழ்க்கை என்று எந்திரத்தனமாக இருக்காதீர்கள். நாம் உணர்வுகள் உள்ள மனிதர்கள்.



கீழிருக்கும் புகைப்படத்தில் இருக்கும் நண்பர் வினோத் குமார் கடந்த ஐந்து வருடங்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை பார்த்துவிட்டு இந்த எந்திரத்தனமான சமூக வாழ்க்கை பிடிக்காமல் வேலையை விட்டு விட்டு தான் சேர்த்து வைத்திருந்த சிறிய தொகையை எடுத்துக்கொண்டு ஏழு மாதங்களில் பெரும்பாலான‌ இந்தியாவையும் சுற்றி பயணித்து வந்திருக்கிறார். இந்த மாத இறுதிக்குள் முழு இந்தியாவை சுற்றி வந்து விடுவார். வாழ்வின் தாகம் தீரும்வரை பயணிப்பேன் என்று கூறுகிறார். தான் சந்திக்கும் புதிய இடங்களைக்காட்டிலும் புதிய மனிதர்களையே கண்டு பிரமிக்கிறார். எங்குமே முன்பதிவு செய்தோ திட்டமிட்டோ செல்லாமல் கிடைத்த இரயிலில் பயணித்து கிடைத்த இடங்களில் தங்கி கிடைத்ததை சாப்பிட்டு இந்தியாவை சுற்றி வந்திருக்கிறார் வினோத் குமார். செல்வ செழிப்பு என்பது பணத்தில் அல்ல, குணத்தில் என்பதற்கு நல்ல உதாரணம் இவர். சிறந்த வரலாற்று பின்னனியுடைய இயற்கையுடன் நெருங்கி வாழும் மக்களை சந்தித்து அவர்களைப்போல வாழ வேண்டுமென்பதே இவருடைய அடிப்படை குறிக்கோள். நாடோடிகளுக்கும் நமக்கும் உள்ள இடைவெளிகளை அறுத்தெறியும் கலையை அறிந்தவர் வினோத் குமார். தன்னுடைய வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் ஒவ்வொரு மனிதனும் முழு மனதுடன் முழு ஈடுபாட்டுடன் தான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் முடிக்கிறான். விதி என்பது நமக்கு நாமே எழுதிக்கொள்வது. நமக்கு நாமே எழுதும் விதி நாம் விரும்பும் வாழ்க்கையாக இருக்க வேண்டுமே தவிர யாரோ எங்கோ அவிழ்க்கும் முடிச்சால் இங்கு நமக்கு போடும் கைவிலங்காக அது இருக்கக்கூடாது என்பதற்கு வினோத் குமார் நல்ல உதாரணம். அவர் இப்பொழுது அவருக்காக வாழ்கிறார். நாம் இந்த சமூகத்தில் இப்படி இருந்தால் தான் வாழ முடியும் என்றோ இப்படி வாழ்வது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்றோ சப்பைகட்டு கட்டிக்கொண்டு எப்படியோ காலத்தை ஓட்டத்தான் போகிறோம். எனினும் நம் வாழ்க்கையை நாம் தீர்மானிப்போம், பணமோ பொருளோ பகட்டோ அல்ல. எவன் ஒருவனால் போலியான ஒரு சமூக வாழ்க்கைக்காக தன் நேரத்தை தனக்காக முழுமனதுடன் செலவு செய்து காலம் முழுதும் வாழ‌ முடியவில்லையோ அவன் வாழவே தகுதியற்றவனாகிறான்.



வினோத் குமாரைப் பற்றி இந்து இணைய இதழில் வெளிவந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு:
http://www.thehindu.com/life-and-style/nxg/article3424949.ece